
மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தான்'' என்று வேதம் கூறுகிறது. ''சாந்த குணமுள்ளவர் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்'' என்கிறார் இயேசு.
யார் இந்த மோசே (மோசஸ்)? எப்படி சாந்த குணம்பெற்றார்? யூதர்களின், லேவி கோத்திரத்தில் தோன்றியவர் மோசே. அவர் பிறந்த போது, எகிப்தின் ராஜா பார்வோன், எபிரேயர்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை நதியில் போட்டு கொன்றுவிடும்படி கட்டளையிட்டிருந்தான். அந்த கோத்திரத்தில் பிறந்த மோசேயை, நாணற்பெட்டியில் வைத்து தண்ணீரிலே விட்டனர்.
பார்வோனின் மகள், குழந்தையைக் காப்பாற்றி, ராஜகுமாரனாக, அரண்மனையில் வளர்த்தார். நாற்பது வருடங்கள் அரண்மனையில் வளர்ந்த மோசே, தான் யார் என்று தெரிந்தபோது, லட்சக்கணக்கான தன் இனத்தவர், அடிமைகளாக இருந்த நிலையை அறிந்தார். அவர்கள் சுதந்திரம் பெற்று, கானான் தேசத்தில் குடியேற்ற தீர்மானித்தார். தன் வளர்ப்புத்தாயான, எகிப்து ராணியின் சொந்த மகனான, தன்னுடைய சகோதரனிடத்திலேயே சென்று, எபிரேயர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ராஜாவான பார்வோனோ, தன்னுடைய சொந்தத்தாயின் வளர்ப்பு மகனான மோசே, தனது உறவினர்களுக்காக வளர்த்த பாசத்தை மறந்துவிட்டாரே என்று கோபம் கொண்டார். தான் விரும்பியிருந்தால், மோசே அந்த ராஜாவின் இடத்திலே ஒரு பார்வோனாக அமர்ந்திருக்கலாம். அப்படிப்பட்ட உயர்ந்த நிலையை விட்டுவிட்டு, அடிமைகளாக இருந்துவந்த எபிரேயர்களுக்காக ராஜவாழ்க்கையை உதறிவிட்டு, அடிமை வாழ்க்கை வாழ முடிவெடுத்தார். 40 வருட காலமாக எபிரேயர்கள் எகிப்தைவிட்டு புறப்பட்டுச் செல்லும் வரை, பார்வோனுக்கும், மோசேக்கும் எபிரேயர்கள் நிமித்தம் மனஸ்தாபம் வரும்போதெல்லாம், பார்வோனும் தன் சகோதரன்தானே என்று மோசே பொறுமையாகவே இருந்தார்.
கடைசியில் 400 வருடங்களாக அடிமைகளாயிருந்த எபிரேயர்களை எகிப்திலிருந்து விடுவித்து, சீனாய் பாலைவனம் வழியாக கானான் தேசத்துக்கு வழிநடத்திச் சென்றார். போகும் வழியிலே எபிரேயர்கள் பலமுறை கடவுளோடும், மோசேயோடும் சண்டையிட்டார்கள். வழியிலே தாங்கள் விரும்பிய மாமிச உணவு கிடைக்கவில்லை என்று முணுமுணுத்தார்கள். பின் கடவுள் மனிதர்களுக்கு 10கற்பனைகளை தன்னுடைய கைகளினாலே எழுதி, மோசே மூலம் கொடுத்தனுப்பினார். அதற்குள் எபிரேயர்கள் மறுபடியும் கடவுளுக்கு விரோதமாக கலகம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
கர்த்தர் இந்த ஜனங்களைப்பற்றி மோசேயினிடத்தில் இவ்விதமாய் கூறுகிறார் ''இவர்கள் வணங்கா கழுத்துள்ளவர்கள்.
நான் இவர்களை அழித்துப் போடுகிறேன்'' என்று.
ஆனால், மோசே ஜனங்களுக்காக கர்த்தரை வேண்டிக்கொள்ள ''கர்த்தர் செய்ய நினைத்த தீங்கை செய்யாதபடிக்கும் பரிதாபம் கொண்டார்'' (யாத் 32:14) மோசே செய்தஇந்த விண்ணப்பம்தான் அவர் மிகப்பெரிய சாந்தகுணமுள்ளவர் எனக் காட்டியது. அந்த சாந்தகுணம்தான் அவரை பாக்கியவானாக மாற்றியது.
நாம் எப்படியிருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். இந்த உலகத்தை சாந்த குணமுள்ளவர்கள்தான் சுதந்தரித்துக் கொள்ளமுடியும்.