ADDED : டிச 29, 2015 11:56 AM

சென்னையில் பெரும் மழை பெய்தது. மக்கள் பட்ட கஷ்டங்களுக்கு அளவே இல்லை. ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல், பல பாவங்களைச் செய்யும்போது, அவரது கோபத்துக்கு நாம் ஆளாக நேரிடும்.
அப்போது, அவர் முதன்முதலாக நம்மைச் சோதிப்பது இயற்கையைக் கொண்டு தான். ஆனால், அவரை முழுமையாக நம்பி, நம் செயல்பாடுகளை நல்லபடியாக அமைத்துக் கொண்டால் நிச்சயம் அவர் உதவுவார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த போதகர் ஜியார்ஜ் முல்லர், ஒரு கப்பலில் குவபெக் நகருக்கு சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த நகரை அடைய வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. ஆனால், செல்லும் வழியில் பனி மூட்டத்தால் கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.
முல்லர் கேப்டனிடம் சென்று,''நீங்கள் கப்பலை கிளப்புங்கள். நான் சனிக் கிழமைக்குள் அங்கு இருந்தாக வேண்டும்,'' என்று சொன்னார்.
கேப்டன் சிரித்தார்.
'நீங்கள் வெளியே போய் பாருங்கள். பனி மூட்டத்தில் கண்ணே தெரியவில்லை. இப்போதிருக்கும் சீதோஷ்ண நிலையைப் பார்த்தால்
இன்னும் 10 மணி நேரத்திற்குள் கடலே உறைந்து போகும் அளவுக்கு குளிர் இருக்கிறது. எனவே நீங்கள் சொல்வது சாத்தியமில்லை,'' என்றார்.
முல்லர் அவரிடம், 'நான் 57 ஆண்டு காலமாக இந்த வழியில் பயணித்து கொண்டிருக்கிறேன். ஒருமுறை கூட நான் சொன்ன நேரத்தில் போகத்தவறியது இல்லை. இப்போதும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதற்குரிய வழியை உண்டாக்குவார்,''என்று சொல்லி கேப்டனை அழைத்து கொண்டு ஒரு அறைக்குள் சென்றார். ஜெபிக்க ஆரம்பித்தார்.
இப்போதும் கேப்டன் அவரிடம், 'உங்கள் ஜெபத்தால் நேரம் தான் வீணாகும். பயன் ஏதும் இருக்கப்போவது இல்லை. இந்த கடல் பயணம் பற்றி அனைத்தும் நான் அறிவேன்,''என்றார்.
முல்லர் சற்றும் கவலைப்படாமல்,''நீங்கள் சொல்வது பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் எல்லா சுற்றுச்சூழல்களையும் தம்முடைய ஆளுகைக்குள் வைத்து நடத்தும், ஜீவனுள்ள ஆண்டவரை எனக்குத் தெரியும். நான் அவரை நம்பியே ஜெபிக்கிறேன்,''என சொல்லிவிட்டு தொடர்ந்து ஜெபித்தார்.
சற்று நேரத்தில் பனிமூட்டம் விலகியது. கேப்டன் ஆச்சரியப்பட்டார். நம்பிக்கையுடன் ஜெபித்தால் எல்லாமே சாத்தியம் என்பதை அறிந்து, தன் வாழ்க்கையிலும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்.
இந்த புத்தாண்டில் இருந்தாவது, நாத்திகமும், விதண்டாவாதமும் பேசுவதை விட்டுவிட்டு, நல்லதைச் செய்யவும், ஆண்டவரை நம்பவும், அவரது போதனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவும் உறுதியெடுப்போம்