ADDED : ஜன 05, 2016 12:36 PM

சமீபத்தில் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வெள்ளம் வந்தது. சென்னை மக்கள் ரொம்பவே சிரமப்பட்டனர். இது மட்டுமல்ல! உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதோ ஒரு பிரச்னையால் மக்கள் சிரமப்படுகிறார்கள். இவ்வாறு உலக மக்கள் வேதனையடைய தேவன் ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
'ஆண்டவரே! செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்? என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்தினீர்? இந்த வெள்ளம் ஏன் எங்களை இப்படி வருத்தியிருக்க வேண்டும்? எங்கள் உடைமைகளை ஏன் பாழாக்கினீர்? இப்படி தங்கள் கஷ்டத்தைச் சொல்லி ஆண்டவரிடம் மக்கள் புலம்புகிறார்கள்.
'தமிழகத்தில் ஏன் இவ்வளவு வெள்ளம்? ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விதிமீறல்களை ஏன் அனுமதிக்கிறீர்கள்?'' என்று உயர் அதிகாரியிடம், ஒரு நிருபர் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்?
'என்னை ஏன் குற்றப்படுத்தி கேள்வி கேட்கிறீர்கள்! ஒவ்வொருவரும் துணிந்து கட்டுமான விதிகளை மீறுகிறார்கள். அப்படி மீறுவோர் தான் விபத்தில் சிக்குகிறார்கள். வேதனையை அவர்களே வரவழைத்துக் கொள்கிறார்கள்,'' என்பார்.
இது நிஜம் தானே! சட்டத்தை மீறுவதால் தானே துன்பம் வருகிறது! அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களையும் கெடுத்து நம்மையும் கெடுத்துக் கொண்டது யார்? குளம் என்றே தெரியாமல் வீடு கட்டியது யார்? இதே போல், ஆண்டவருடைய சட்டப்
புத்தகமான வேதாகமத்தை (பைபிள்) புறக்கணிப்பதால் தான் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள்.
ஆண்டவர் நமக்கென சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார். பொய் சொல்லாதே, களவு செய்யாதே, உழைக்காதவனுக்கு உண்ண உரிமையில்லை... இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லையே!
சரி... ஒரு சர்வாதிகாரியைப் போல் ஆண்டவர் நமக்கு ஆணையிட்டிருக்கிறாரா? இல்லையே! இன்னின்ன செயல்களைத் தவிர்த்தால், நீ சுகமாக இருக்கலாம் என்ற கரிசனையுடன் தானே சொல்லியிருக்கிறார்! அழகான உலகத்தைக் கொடுத்த தேவன், அங்கே வாழும் முறையையும் கற்றுத் தந்துள்ளார்.
கொடுக்கப்பட்ட செயல்முறைக்கு மாறாக நடந்தால், ஒரு மின்சாதனம் எப்படி செயலிழக்குமோ அதுபோல், ஆண்டவரின் கட்டளைகளை மீறிநடக்கும்போது பிரச்னைகள் தலை தூக்குகிறது. ஆண்டவர் கொடுத்த சரீரத்தைக் குடித்தும், புகைபிடித்தும் கெடுக்கிறோமே! பின்னர் கஷ்டம் வரத்தானே செய்யும்!
பைபிளில் ஒரு வசனம், 'உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை. அது காயமும், வீக்கமும், நொதிக்கிற ரணமுமுள்ளது. அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயால் ஆற்றப்படாமலும் உள்ளது'' என்கிறது.
மனித சரீரத்தின் உண்மைத்தன்மை இந்த வசனத்தில் வெளிப்படுகிறது. மனித உடல் ஒரு சதைப்பிண்டம். இதை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போடுகிறார்கள் என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாவத்தின் பலன்களே துன்பமாக நம்மைத் தேடி
வருகின்றன. ஆண்டவரிடம் பாவமன்னிப்பு கேட்டு அதில் இருந்து விடுபடுங்கள் என்பது இந்த வசனம் உணர்த்தும் கருத்து.
நமது துன்பங்களுக்கு நாமே காரணம் என்பது புரிந்து விட்டதல்லவா! இனி தவறு செய்ய மாட்டீர்கள்தானே!