/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
உழைப்போம் உயர்வோம் - புத்தாண்டு உறுதிமொழி
/
உழைப்போம் உயர்வோம் - புத்தாண்டு உறுதிமொழி
ADDED : டிச 30, 2014 12:25 PM

ஒரு வாலிபன் போதகரிடத்தில், ''ஆதாமும், ஏவாளும் ஒரு வேலையும் செய்யாமல், ஏதேன் தோட்டத்தில் உலாவிக் கொண்டும், சுவையான பழங்களைச் சுவைத்துக் கொண்டும் இருந்தது போல, நானும் எந்த வேலையும் செய்யாமல் இருக்கப் போகிறேன்,'' என்றான்.
அதற்கு போதகர் அந்த வாலிபனிடம், ''ஆதியாகமம் 2;15ல் தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து, அதைப் பயன் படுத்தவும், காக்கவும் வைத்தார். ஆகவே, நாம் எல்லோரும் உழைக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது,'' என்று கூறினார்.
''எனக்கன்பானவர்களே! நாம் சோம்பலாய் இருக்கக் கூடாது''(எபே.5: 1517) என்கிறது பைபிள். நாம் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போமானால், மற்றவர்களிடம் அதிக நேரம் செலவிட்டுப் பிரிவினைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. வீண் பேச்சும்,
கட்டுக்கதைகளும் பொய் வதந்திகளைப் பரப்புகிறது. வேலை செய்யாத ஒருவன், மற்றவர்களிடம் பொருளையும், பணத்தையும் எதிர்பார்க்க ஆரம்பிப்பான். வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் திண்டாடுவான்.
''யாவருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்.... ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்'' (ரோமர்.13:78) என்ற வேத வசனத்தின் படி நடக்க முடியாத நிலைக்கு ஆளாவான்.
அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனையின் படி சபைகளுக்கு கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். ''ஒருவன் வேலை செய்யாதிருந்தால் சாப்பிடவும் கூடாது'' (தெசலோனிக்கேயர்.3:10) என்கிறார். மேலும், ''அமைதலுள்ளவர்களாயிருக்கும் படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்த கைகளினால் வேலை செய்யவும் வேண்டும் என்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறோம்,'' (தெச.4:12) என்றும் அவர் சொல்கிறார். மேலும் 2 தெசலோனிக்கேயர். 3:6,14ஐ வாசிப்போமேயானால் அதில், ''வேலையின்றி சோம்பலுள்ளவர்களாயும், வீண் அலுவல்காரருமாய் இருக்கிற சகோதர, சகோதரிகளை விட்டு விலகுங்கள்,'' என்று எழுதியுள்ளார்.
ஆகவே, நீங்கள் வேலை செய்வதில் சோம்பேறிகளாய் இருக்கக் கூடாது. வேலை செய்யும் போது தேவனுக்குப் பயந்து உண்மையாய் வேலை செய்ய வேண்டும். தேவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வோடு வேலை செய்ய வேண்டும். கொடுத்த கடமையைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, குடும்பத்தைக் காப்பாற்றவும், தேவ கட்டளையை நிறைவேற்றவும் புத்தாண்டில் உறுதியெடுப்போம்.