ADDED : மார் 25, 2013 03:30 PM

நியாயமாக நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளுக்குக்கூட, சம்பளத்துடன் லஞ்சமும் வாங்கும் உலகம் இது. ஆனால், 'பசித்த சமயத்திலும் தன்னைத் தேடி வரும் உதவிகளை ஒதுக்குகிறவர்களே கண்ணியவான்கள்' என்கிறது பைபிள். ஒரு கிறிஸ்து சபையின் போதகர்கள், பசி, பட்டினியுடன் தேவநற்காரியங்கள் செய்து வந்தனர். ஒருமுறை அவ்வூர் பணக்காரர் வீட்டில் நடந்த திருமணத்தின் போது ஏராளமான உணவு மீந்துவிட்டது. அதை போதகர்களுக்கு கொடுத்து அனுப்பினர்.
அவர்கள் உணவு கொண்டு வந்தவரிடம், ''ஐயா! இந்த உணவை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமைக்காக வருந்துகிறோம். இந்த ஊரில் எத்தனையோ ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கு கொடுங்கள்,'' என்றனர். ஒரு ராஜாவிடம் வேலை செய்பவன் தன் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது. ராஜாவின் அதிகாரி என்ற கவுரவம் வேண்டும். இல்லாவிட்டால், அந்த ஊழியன் செய்யும் தவறு, ராஜாவுக்குத் தான் அவப்பெயரை உண்டாக்கும். அதுபோலவே 'இயேசு' என்ற முதலாளியிடம், பணிபுரியும் போதகர்கள் அவரைப் போலவே கஷ்டங்களுக்கு மத்தியிலும் பொதுச் சேவை செய்ய வேண்டுமே தவிர, தங்கள் கஷ்டத்தை பொருட்படுத்தக் கூடாது.
அப்போஸ்தலர் பவுல் சொல்கிறார்.
''ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், கற்பிலும் மாதிரியாய் இரு,'' என்று. கஷ்டத்திலும் பிறரிடம் கை நீட்டக் கூடாது என்பது புரிகிறதா!