ADDED : பிப் 12, 2013 12:30 PM

இயேசு கிறிஸ்து அடிக்கடி கலிலேயா கடற்கரைக்கு செல்வார். படகுகளில் ஏறிச்செல்வதில் அலாதிப் பிரியம் உண்டு. ஒருமுறை அவர் சில மீனவர்களுடன் படகில் பயணம் செய்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட தூரம் சென்றதும் உறங்கிவிட்டார்.
அப்போது, கடும்புயல் ஏற்பட்டது.
படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. இக்கட்டான நிலையில் அவர்கள் இயேசு கிறிஸ்துவை எழுப்பி, ''போதகரே! நாங்கள் மடிந்து போவது பற்றி உமக்கு கவலையாய் இல்லையா?'' என்று கேட்டார்கள்.
உடனே அவர் எழுந்து காற்றை அதட்டி, கடலைப் பார்த்து, ''இரையாதே, அமைதலாயிரு!'' என்றார். அதன்பிறகு அவர்களிடம், ''எதற்காக இப்படி பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று?'' என கேட்டார். ஆண்டவரிடம் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். தங்களுக்கு ஓர் ஆபத்து வந்துவிட்டால், ஆண்டவரை நோக்கி 'எங்களைக்
காப்பாற்று' என கதறுகிறார்கள். மற்ற நேரங்களில் மறந்துவிடுகிறார்கள். எல்லோரும் பூமியில் வாழ ஒரு குறிப்பிட்ட காலம் இரவலாகத் தரப்பட்டிருக்கிறது.
சீக்கிரமாகவோ, காலம் தாழ்த்தியோ மரணம் நிச்சயமாக நம்மை வாரிக்கொண்டு போய்விடும். அதன்பின் நம் தேவையை உணர நேரமிருக்காது. எனவே, தேவன் நமக்கு அளித்திருக்கும் இந்த நேரத்தில், அவரது நல்லுரைகளைக் கடைபிடித்து நல்லவனாய் வாழ வேண்டும்.