
தினமும் திருநீறு அணிந்து கீழ்க்கண்ட பதிகத்தை பாடினால் நலமுடன் வாழலாம்.
பாடற் கினிய வாக்களிக்கும்
பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற்கினிய அடியவர்தம்
கூட்டம் அளிக்கும் குணமளிக்கும்
ஆடற்கினிய நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற்கினிய சீரளிக்கும்
சிவாய நம என்றிடு நீறே
கருமால் அகற்றும் இறப்பதனைக்
களையு நெறியும் காட்டுவிக்கும்
பெருமால் அதனால் மயக்குகின்ற
பேதை மடவார் நசை அறுக்கும்
அருமால் உழந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்
திருமால் அயனும் தொழுதேத்தும்
சிவாய நம என்றிடு நீறே
வெய்ய வினையின் வேரறுக்கும்
மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
துய்ய அமல நெறிகாட்டும்
உன்னற் கரிய உணர்வளிக்கும்
ஐயம் அடைந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்
செய்ய மலர்க்கண் மால் போற்றும்
சிவாய நம என்றிடு நீறே
கோல மலர்த்தாள் துணைவழுத்தும்
குலத்தொண்டு அடையக் கூட்டுவிக்கும்
நீல மணிகண்டப் பெருமான்
நிலையை அறிவித்தருள் அளிக்கும்
ஆல வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்
சீலம் அளிக்கும் திருவளிக்கும்
சிவாய நம என்றிடு நீறே
வஞ்சப் புலக்கா டெறியஅருள்
வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
கஞ்சத் தவனும் கரியவனும்
காணற் கரிய கழலளிக்கும்
அஞ்சில் புகுந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செஞ் சொல் புலவர் புகழ்ந்தேத்தும்
சிவாய நம என்றிடு நீறே
கண்கொள் மணியை முக்கனியைக்
கரும்பைக் கரும்பின் கட்டிதனை
விண்கொள் அமுதை நம்அரசை
விடைமேல் நமக்கு தோற்றுவிக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண் கொள் முனிவர் சுரர் புகழும்
சிவாய நம என்றிடு நீறே.
நோயை அறுக்கும் பெருமருந்தை
நோக்கற் கரிய நுண்மைதனைத்
துாய விடைமேல் வரும் நமது
சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம்
சிவாய நம என்றிடு நீறே
எண்ண இனிய இன்னமுதை
இன்பக் கருணைப் பெருங்கடலை
உண்ண முடியாச் செழுந்தேனை
ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
அண்ண வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்
திண்ண மளிக்கும் திறமளிக்கும்
சிவாய நம என்றிடு நீறே
சிந்தா மணியை நாம் பலநாள்
தேடி எடுத்த செல்வமதை
இந்தார் வேணி முடிக்கனியை
இன்றே விடைமேல் வரச்செயும்காண்
அந்தோ வினையால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்
செந்தாமரையோன் தொழுதேத்தும்
சிவாய நம என்றிடு நீறே
உள்ளத் தெழுந்த மகிழ்வை நமக்
குற்ற துணையை உள்உறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக்
கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்
தெள்ளக் கடலான் புகந்தேத்தும்
சிவாய நம என்றிடு நீறே
உற்ற இடத்தில் உதவ நமக்
குடையோர் வைத்த வைப்பதனைக்
கற்ற மனத்தில் புகுங்கருணைக்
கனியை விடைமேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்
செற்றம் அகற்றித் திறல் அளிக்கும்
சிவாய நம என்றிடு நீறே.