
எம்.விஜயா, வில்லுக்குறி, கன்னியாகுமரி: புகழுடன் வாழ...
ஞாயிறன்று சூரியனை உதிக்கும் நேரத்தில் வழிபடுங்கள். பின்பு சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.
வி.ராகவி, சத்திரப்பட்டி, விருதுநகர்: திருமணத்தடை விலக...
தஞ்சாவூர் மாவட்டம் திருமணஞ்சேரி கோயிலுக்கு செல்லுங்கள்.
பி.பார்வதி, மருதமலை, கோயம்புத்துார்: செலவில்லாமல் முன்னோரை எப்படி வழிபடலாம்?
அமாவாசை தர்ப்பணம், சிராத்தத்தை அவரவர் சக்திக்கு ஏற்ப முடிந்தளவுக்கு செய்யுங்கள். செலவை விட முன்னோரை மறக்காமல் இருப்பது அவசியம்.
எஸ்.முருகன், வீரவநல்லுார், திருநெல்வேலி: மரத்தை வெட்டினால் குருதோஷம் வருமா?
வரும். இயற்கையை பாதுகாப்பவர் குரு. இயற்கையை அழித்தால் தோஷம் தானே!
கே.சுப்பிரமணி, துரைப்பாக்கம், காஞ்சிபுரம்: கடன் அதிகம் இருக்கிறது. பரிகாரம் உண்டா...
வெள்ளி அன்று விளக்கேற்றி கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வழிபடுங்கள்.
கே.சிவனேசன், திருநள்ளாறு, புதுச்சேரி: அறம் பாடுதல் என்றால்...
தவறு செய்பவர் மீது கோபத்தில் பாடுவது.
வி.பரதன், கம்பம், தேனி: ஸ்ரீராமஜெயத்தை சொன்னால் பலன் கிடைக்குமா...
பலன் கிடைக்கும். வேடுவ பெண் சபரி 12 ஆண்டுகள் ராமநாம ஜபம் செய்து மோட்சம் அடைந்தாள்.
எம்.ஆதிகோசலை, வாஸ்காஸ், டில்லி: ஹயக்ரீவர் எதற்காக அவதரித்தார்?
குதிரைமுக அசுரனை அழிக்க ஹயக்ரீவர் அவதரித்தார். அதிக மதிப்பெண் பெற இவரை வழிபடுங்கள்.
டி.பிரியா, மடிக்கேரி, மைசூரு: சிவன் மீது பிள்ளைத்தமிழ் பாடவில்லையே... ஏன்?
குழந்தையாக அவதரித்த தெய்வத்திற்கே பிள்ளைத்தமிழை பாட வேண்டும். பிறப்பற்றவர் சிவன். அதனால் பாடுவதில்லை.