
சு.கனிகா, திருமங்கலம், மதுரை: என்றும் 16 என வாழ்த்துவது ஏன்?
16 வயது இளைஞரைப் போல சுறுசுறுப்பு, மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக.
சி.ஜோதிகா, சிதம்பரம், கடலுார்: நதி வழிபாடு எப்போது செய்ய வேண்டும்?
அதிகாலையில் நதியில் நீராடி, தீபமேற்றி மலர் துாவுங்கள். பாவம் தீரும்.
ஆர்.கனிஷ்கா, ராமநாதபுரம், கோயம்புத்துார்: கோயில் குளத்து மீன்களுக்கு பொரி இடலாமா?
இடலாம். ஆனால் அதிகமாக கொடுக்கும் போது மீன்களுக்கு பாதிப்பும், நீரும் மாசுபடுகிறது. இதனால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ந.மல்லிகா, வீனஸ் காலனி, சென்னை: டிஜிட்டல் உலகில் குழந்தையின் மனதில் பக்தியை விதைப்பது எப்படி?
அலைபேசி தவிர்க்க முடியாத ஒன்று. அதில் பக்திக் கதைகளை பார்க்கப் பழக்குங்கள்.
பி.கார்த்திகா, சின்னமனுார், தேனி: அஷ்டமியன்று பைரவருக்கு தீபம் ஏற்றினால்...
பூசணிக்காயில் தீபமேற்ற கிரக தோஷம், கடன் தீரும்.
கே.அனாமிகா, கடையநல்லுார், தென்காசி: திரிசூலத்தில் பிறர் வைத்த பழத்தை எடுத்து விட்டு புதியதை குத்தலாமா...
குத்தலாம். உங்களைப் போல பிறரும் செய்வார்கள் என்பதை மறவாதீர்.
சி.அவந்திகா, கரோல்பார்க், புதுடில்லி: பிறந்த கிழமையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா?
பிறந்த கிழமைக்கும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும் சம்பந்தம் இல்லை.
(பெண்கள் : செவ்வாய், வெள்ளி; ஆண்கள் : புதன், சனி)
தி.சந்திரிகா, குளச்சல், கன்னியாகுமரி: மகான்களின் சமாதியில் தியானம் செய்தால்...
கவலை, பிரச்னை குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
எம்.பூமிகா, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்: கருவறையில் உள்ள தீபத்தின் பெயர் என்ன?
பஸ்சிம தீபம் என்று பெயர். இதற்கு எண்ணெய், திரி கொடுத்தால் நீண்ட ஆயுளுடன் நன்றாக வாழ்வீர்கள்.