ADDED : டிச 22, 2023 04:49 PM

* திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலை 'பூலோக வைகுண்டம்' என்பார்கள். 108 திவ்யதேசத்தில் இத்தலம் முதன்மையானது.
* பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசையாழ்வார் என பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
* 21 கோபுரங்கள், 7 சுற்று பிரகாரங்கள் என பிரமாண்டமாக அமைந்து இக்கோயிலின் ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம்.
* தை, மாசி, சித்திரை மாதம் என மூன்று முறை பிரம்மோற்ஸவம் இங்கு நடைபெறுகிறது.
* பெரிய கோயில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரியவசரம் (நைவேத்யம்), பெரியதிருமதில், பெரிய கோபுரம் இப்படி இங்கு அனைத்தும் பெரிய என்ற சொல்லுடன் வரும்.
* மோட்சம் தரும் தலம் என்பதால் ரங்கநாதரை வணங்குவது பிறவிப் பயனாகும்.
* இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர் இங்கேயே மோட்சம் அடைந்தார். இவரது உடலை சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். இங்கு தனிச்சன்னதியில் காட்சி தரும் ராமானுஜருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திர திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
* மூலவர் ரங்கநாதர் திருப்பாற்கடலில் இருந்து தோன்றியவர். இவரது சன்னதி எதிரில் கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார்.
* கம்பர் இங்குதான் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார். அப்போது அறிஞர்கள் சிலர் ராமாயணத்தில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக் காட்டி, 'ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது' என்றனர். அதற்கு கம்பர், 'அதை நரசிம்மரே சொல்லட்டும்' என்றார்.
உடனே நரசிம்மர் கர்ஜனையுடன் இங்கிருந்த துாணில் இருந்து வெளிப்பட்டு, 'கம்பரின் கூற்று உண்மை' என ஆமோதித்தார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர் தாயார் சன்னதி அருகில் தனியாக இருக்கிறார்.
இவருக்கு எதிரில் கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.