ADDED : பிப் 09, 2024 11:25 AM

திருமால் அடியார்களான ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்ய தேசங்களில் 60ம் தலம் திருவள்ளூர் வீரராகவர் கோயில். இதற்கு வீட்சாரண்யம், கிங்கிருகேசபுரி என்றும் பெயருண்டு. இதன் சிறப்புகள்...
* சாலிஹோத்ர மகரிஷியிடம் உணவைப் பெற்ற திருமால், அதை உண்ட பிறகு, 'நான் எந்த இடத்தில் ஓய்வு எடுப்பது?' என கேட்டார். தனது பர்ணசாலையைக் காட்டி, 'இந்த இடத்தில் படும்' என்னும் பொருளில், 'எவ்வுள்' எனத் தெரிவித்தார். அதுவே இத்தலத்தின் பெயராக 'எவ்வுளூர்' என்றானது. தற்போது திருவள்ளூர் எனப்படுகிறது.
* 'எவ்வுள் கிடந்தான்' என்று திருமங்கையாழ்வாரும், திருமழிசை ஆழ்வார், 'எவ்வுள் பெருமலை' என்று திருமழிசையாழ்வாரும் இத்தலத்தை பாடியுள்ளனர்.
* மூலவர் வீரராகவப்பெருமாள் 15 அடி நீளத்தில் சயனக் கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் நடக்கிறது.
* இங்குள்ள கனகவல்லித்தாயார், லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் விசேஷமானவை.
* தீர்த்தம் ஹிருதபாப நாசினி. கங்கையை விட புனிதமான இத்தீர்த்தத்தில் நோய்கள் தீர வெல்லம் கரைத்து வழிபடுகின்றனர்.
* வடலுார் வள்ளலாரின் வயிற்று வலியை குணமாக்கியவர் இந்தப் பெருமாளே.
* கை, கால் வலி, உடல் சோர்வு, திருப்தியின்மை, நியாயமான நிறைவேறாத ஆசைகள் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று அமாவாசையன்று தரிசிப்பது நல்லது.