
எம்.யமுனா, திருப்பரங்குன்றம், மதுரை.
*கோபூஜை செய்ய ஏற்ற நாள் எது?
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை - சகல நன்மையும், அமாவாசை - முன்னோர் ஆசியும் கிடைக்கும்.
டி.அனிதா, மேல்மலையனுார், விழுப்புரம்.
*சூலத்தன்று பயணம் செல்ல நேர்ந்தால் என்ன செய்வது?
குலதெய்வத்தை வழிபட்டுச் செல்லுங்கள்.
டி.தீபிகா, ஆஸ்ரம், டில்லி.
*அதிக துன்பத்திற்கு மனிதன் ஆளாகிறானே...ஏன்?
தீயில் சுட்டால் தங்கம் ஒளி விடுவது போல, துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். நாளடைவில் அவனே ஞானியாகிறான்.
மு.கணேஷ், வால்பாறை, பொள்ளாச்சி.
*திருமணமான பெண்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தை வழிபடலாமா?
வழிபடலாம்.
எஸ்.திருவெண்காடன், கொட்டாரம், கன்னியாகுமரி.
*புனரபி ஜனனம்; புனரபி மரணம் - பொருள் என்ன?
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் பாடலில் இது உள்ளது.
பி.சிந்துஜா, மடிக்கேரி, மைசூரு.
*சுவாமிக்கு புழுங்கல் அரிசி நைவேத்யம் செய்யலாமா?
பச்சரிசியில் மட்டும் நைவேத்யம் செய்ய வேண்டும்.
ம.ரேஷ்மா, ஆய்க்குடி, தென்காசி.
*மற்றவர் ஏற்றிய தீபம் அணைந்தால் அதை நாம் ஏற்றலாமா?
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று துாண்டி விட்டது. மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அது பிறந்தது.
சி.பார்வதி, கோம்பை, தேனி.
*சிறந்தது வழிபாடா... தொண்டா...
இரண்டும் சிறந்ததே. ஆனால் வழிபாட்டுடன் தொண்டு செய்வது நல்லது.
ஆர்.மைதிலி, திருத்தணி, திருவள்ளூர்.
*நாளும் கோளும் நலிந்தவர்க்கில்லை என்கிறார்களே...
இக்கட்டான சூழலில் இருப்பவர் (நலிந்தவர்) நாள், நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்பது இதன் பொருள்.