ADDED : பிப் 19, 2024 01:30 PM
*'நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன' என பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்.
* பொம்மலாட்டப் பொம்மை மாதிரி உயிர்களை கடவுளே ஆட்டி வைக்கிறார்.
*'சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கின்ற திறம் அரிது' என்கிறார் தாயுமான சுவாமிகள். அதாவது உடலின் செயலை நிறுத்தினாலும் சிந்திக்கும் செயல் நிற்காது. அதை அடக்கி நல்ல விஷயங்களில் திருப்புங்கள்.
* மனிதர்கள் நான்கு விதங்களில் பாவம் செய்கிறார்கள்.
1. உடலால் கெட்ட செயல்.
2. வாயால் புரளிப்பேச்சு, பொய்.
3. மனதால் கெட்ட நினைவுகள்.
4. பணத்தால் செய்யும் பாவம்.
இப்படி எந்த நான்கால் பாவம் செய்கிறார்களோ அந்த நான்காலும் புண்ணியம் தேட வேண்டும்.
* அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் உறுதிப்பொருள்கள். மனிதன் அறவழியில் வாழ்ந்து, பொருள் சம்பாதித்து அதன் மூலம் இன்பத்தை அனுபவித்தால், தானாக வீடுபேறு என்னும் மோட்சம் கிடைக்கும்.
* பேராசையால் மனிதனுக்கு கோபம் ஏற்படுகிறது. இதனால் பாவச்செயல்களில் ஈடுபடுகிறான். கடைசியில் பிறவியும் தொடர்கிறது. பேராசையை ஒழித்தவனுக்கு பிறவியும் இல்லை. துன்பமும் இல்லை.
* உடலுக்கு வந்த நோயை தீர்ப்பது மருத்துவம். உயிருக்கு வந்த நோயை தீர்க்கும் மருத்துவ முறைக்கு 'மதம்' என்று பெயர்.
* மனதில் இருப்பதை சொல்வதற்காக பேசும் சக்தியைக் கடவுள் கொடுத்திருக்கிறார். நினைப்பது ஒன்று, பேச்சில் வெளிப்படுவது வேறொன்றுமாக இருந்தால் மறுபிறவியில் பேச்சுத்திறன் இல்லாமல் போகும்.
* மனதில் கெட்ட எண்ணம் தோன்றுகின்றன. அதை வெளிப்படுத்தினால் சத்தியம் ஆகாது. சத்தியம் என்றால் பேச்சும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. மனதில் உள்ள நல்ல எண்ணங்களை சொல்லி நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.