
*தர்மம் தலை காக்கும் என்பது ஏன்?
ஜே.கார்த்திக், காரைக்குடி, சிவகங்கை.
பலன் கருதாமல் செய்யும் தர்மம் தலையெழுத்தை மாற்றும். இதையே 'தர்மம் தலை காக்கும்' என்றனர்.
*விரதத்தன்று சிலர் உப்பு சேர்ப்பதில்லையே...
எல்.புவனேஷ், பகாட் கஞ்ச், டில்லி.
சுவை மட்டுமின்றி காம, குரோத எண்ணத்தையும் உப்பு தரும். இதை தவிர்க்க உப்பு சேர்ப்பதில்லை.
*விரதத்தன்று சாப்பிடாமல் இருந்தால் போதுமா...
எஸ்.வர்ஷிகா, குளச்சல், கன்னியாகுமரி.
விரதத்தின் நோக்கம் சுயகட்டுப்பாடு. பசி பொறுப்பதோடு மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்களை அடக்குவது அவசியம்.
*வெள்ளியன்று பசுவைப் பார்த்தால் நல்லதாமே...
வி.சந்தோஷ், மாகடி, பெங்களூரு
வெள்ளியன்று அதிகாலையில் பசுவை தரிசிப்பதுடன் வலம் வந்து வணங்கினால் சுபநிகழ்ச்சி நடக்கும். கடன் பிரச்னை தீரும். நிம்மதி கிடைக்கும்.
*கோயில் பிரகாரத்தில் துாங்கலாமா?
கே.சுபாஷினி, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி
கோயில் பிரகாரத்தில் ஓய்வுக்காக உட்காரலாம்.
*வேண்டுதல் வைத்து வழிபாடு செய்கிறேன். இன்னும் நிறைவேறவில்லையே...
எம்.மித்ரா, வால்பாறை, பொள்ளாச்சி
நியாயமான வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். பிறருக்கு தீங்கு நினைத்தால் எதிர்மறை பலன் உண்டாகும்.
*அஷ்டமி தவிர்த்த மற்ற நாளில் பைரவரை வழிபடலாமா...
எல்.ஷிவானி, சின்னமனுார், தேனி.
பைரவர் உள்ளிட்ட எந்த தெய்வத்தையும் எந்த நாளிலும் வழிபடலாம்.
*கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் முரணாக பேசுவோரிடம் எப்படி பழகுவது?
ஏ.சங்கர், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
இது போன்ற கெட்ட குணங்கள் கொண்டவர்களை விட்டு விலகுங்கள்.
*அஹம் பிரம்மாஸ்மி என்றால் என்ன?
பி.ஹரிணி, இலஞ்சி, தென்காசி.
'உனக்குள்ளே கடவுள் இருக்கிறார்' அல்லது 'நானே கடவுள்' என்பது இதன் பொருள்.