ADDED : மார் 27, 2023 08:52 AM

துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னைவந்து நலியும் போது அங்கு
ஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!
நமக்கு தளர்ச்சியான முதுமை காலம் வரும். அதனால் நம்மை காப்பாற்றும் தகுதி படைத்தவர்களை சார்ந்து வாழ்வது உலக இயல்பு. ஆனால் அந்தக் காலம் வருவதற்குள் நமக்கு ஒரு கடமை இருக்கிறது என சொல்கிறார் பெரியாழ்வார்.
'பெருமாளே! நான் தகுதியற்றவனாயினும் உன்னையே சரணம் என்றடைந்தேன். ஏன் தெரியுமா? 'ஆதிமூலமே!' என்று ஓலமிட்ட யானையைக் காத்த கதையினை உலகமே அறியும். நோய் வந்து தாக்கி, நான் நலிவுறும் காலத்தில் உன்னை நினைக்கவும் சக்தியற்றவனாகி விடுவேன். எனவே, அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்துவிட்டேன். ஸ்ரீரங்கத்தில் கண்வளரும் பெருமானே! அடியேனுடைய விண்ணப்பத்தை மறவாமல், நான் இறக்கும் காலத்தே வந்து எனக்கு அருள்புரிவீராக!' என்கிறார்.
எனவே நோய், முதுமை வருவதற்குள் நல்லதை செய்து, பெருமாளின் நாமத்தை சொல்லுங்கள். திவ்ய தேசங்களுக்கு சென்று புண்ணியத்தை தேடுங்கள்.

