
ஆக.23 ஆவணி சதுர்த்தசி நடராஜர் அபிஷேக நாள் - முதல்வார்த்தை முத்தான வார்த்தை
சீர்காழியில் பிறந்த முத்துத்தாண்டவர் வறுமையில் வாடியவர். தேவாரம், திருவாசகம் பாடிக் கொண்டே சீர்காழி தோணியப்பர் கோயில் பிரசாதத்தை உணவாகக் கொண்டு வசித்தார். ஒருநாள் இரவு கோயிலுக்குள்ளே தூங்கிவிட்டார். நடை அடைக்கப்பட்டு விட்டது. அன்று கனவில் தோன்றிய சிவபெருமான், ''நீ சிதம்பரத்திற்கு வா,'' என்று அழைத்தார். முத்துத்தாண்டவர் சிதம்பரம் வந்து சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடினார். நடராஜரை வழிபட்டபோது, இந்தக் கோயில் தான் 'பூலோக கைலாயம் போலும்' என்று ஒரு பக்தர் சொன்ன வார்த்தையையே முதலடியாகக் கொண்டு 'பூலோக கைலாயம்' எனத்துவங்கும் கீர்த்தனையைப் பாடினார். அதன்பின், ஒவ்வொரு நாளும் தான் கேட்கும் சிறந்த வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனை பாடுவதை வழக்கமாகக் கொண்டார். அவர் பாடிய பாட்டைக் கேட்டு பரவசமடைந்த இறைவன், அதற்குரிய கூலியை படிக்காசாக சன்னதியில் வைத்து அருள்புரிந்தார். வறுமையில் வாடிய முத்துத்தாண்டவர் படிக்காசு பெற்று மகிழ்ந்தார். இவரது பாடல்கள் 'முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்' என்று பெயர் பெற்றன.
அக்னியில் எழுந்த ஆடலரசர்
அந்தர்வேதி என்னும் இடத்தில் பிரம்மா, யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்டார். யாகத்தை நடத்த தில்லைவாழ் தீட்சிதர்களை அழைத்து வர தன் பிள்ளையான நாரதரை சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தார். தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தை மறந்து எங்கும் வரமுடியாது என்று மறுத்துவிட்டனர். பிரம்மாவே நேரில் வந்து தீட்சிதர்களை யாகத்திற்கு அழைத்தார். தீட்சிதர்கள் திரும்பி வரும்வரை வியாக்ரபாதரையும், பதஞ்சலி முனிவரையும் நடராஜருக்குப் பூஜைகள் செய்யும்படி வேண்டிக்கொண்டார். பிரம்மாவே நேரில் வந்து கேட்டதால் தீட்சிதர்கள் அந்தர் வேதிக்கு புறப்பட்டனர். யாகம் தொடங்கிய போது தில்லை தீட்சிதர்கள் நடராஜருக்கு பூஜை செய்ய முடியாமல் போனதை எண்ணி வருந்தினர். அப்போது அந்த யாகத்தீயிலியே நடராஜர் அவர்களுக்கு காட்சியளித்தார். அந்த நடராஜர் விக்ரஹம் இப்போது சிதம்பரம் கோயிலில் உள்ளது. அவருக்கு மாணிக்க மூர்த்தி, ரத்தினசபாபதி, ஜோதி நடராஜர் என்று பலபெயர்கள் உண்டு.
தினமும் காலை 10மணிக்கு இவருக்கு பால்,தேன், சந்தன அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து நைவேத்ய தீபாராதனை நடத்தப்படும்.
நான்கு வாசல்களும் புனிதமானதே!
கோயில் என்றால் அது சிதம்பரத்தையே குறிக்கும். இங்குள்ள ஆடல்நாயகனின் அழகில் மயங்காதவர் யாருமில்லை. தரிசிப்பவர்களுக்கு முக்தியைத் தரும் தலம் சிதம்பரம். இக்கோயிலில் நான்கு திசைகளிலும் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. சமயக்குரவர்கள் நால்வரும் தில்லை நாயகனைப் போற்றிப் பாடல்கள் பாடியுள்ளனர். கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு வழியாக திருநாவுக்கரசரும், தெற்கு வழியாக திருஞானசம்பந்தரும், வடக்கு வழியாக சுந்தரரும் வந்து நடராஜரைத் தரிசனம் செய்தனர். நாவுக்கரசர் தேரோடும் வீதியில் அங்கப்பிரதட்சணமாக வந்து நடராஜரைத் தரிசனம் செய்துள்ளார். இந்த மகான்களெல்லாம் வந்த வாசல்கள் மிகவும் புனிதமாவையாக உள்ளன.
கலையார்வம் பெருகட்டும்
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். வரும் 23ம் தேதி ஆவணி சதுர்த்தசி அபிஷேகம் சிவாலயங்களில் மாலை வேளையில் நடைபெறும். பக்தர்கள்
நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க அன்றைய தினம் நல்லநாள். கலையார்வம் மிக்கவர்கள் இன்று அவசியம் நடராஜரைத் தரிசித்து, தங்கள் திறமையை மேலும்
அதிகரித்துக் கொள்ளலாம்.
செம்புக்கஞ்சி குடிச்சதுண்டா?
சோழமன்னன் ஒருவன், ஒரு சிற்பியை அழைத்து நடராஜரின் திருவுருவத்தை வடிக்க ஏற்பாடு செய்தான். ஆனால், அதை வடிக்க பல தடைகள் உண்டாயின. சிற்பி காலம் தாழ்த்திக் கொண்டே இருந்ததால், ''இன்றே கடைசிநாள்! இன்று சிலை பணி முடியாவிட்டால் உன் தலையைக் கொய்துவிடுவேன்'' என்று மன்னன் எச்சரித்தான். செம்புக்குழம்பை கொதிக்கவைத்துக் கொண்டிருந்தார் சிற்பி. அப்போது, ஒரு கிழவனும் கிழவியும் சிற்பியைத் தேடிவந்தனர். வாசலில் நின்று கொண்டு,''ஐயா! பசிக்கிறதே! கஞ்சியாவது கொடுங்கள்!'' என்று கதறினர். சிற்பி கோபத்துடன் அவர்களை விரட்டினார். அப்போது கிழவன், ''அங்கே கொதிக்கிற கஞ்சியையாவது நாலு அகப்பை கொடுங்கள். ஆளுக்கு கொஞ்சம் பசியாறிக் கொள்கிறோம்!'' என்று கெஞ்சினார். சிற்பியும் கோபத்தில், ''குடித்து தொலையுங்கள்,' 'என சூடான செம்புக்கஞ்சியை அத்தம்பதியருக்கு கொடுத்தார். செம்புக்கஞ்சி முழுவதையும் விருப்பத்தோடு குடித்த தம்பதியர் இருவரும், நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக சிலைவடிவில் நின்றனர். இந்த அதிசய நிகழ்வைக் கேள்விப்பட்ட மன்னன், அந்தச்சிலைகளையே, தில்லையம் பலத்தில் (சிதம்பரம் கோயில்) பிரதிஷ்டை செய்தான்.
ஆலமரப்பொந்தில் ஆடலரசர்
சிதம்பரம் கோயிலை அந்நியர் படைகள் தாக்க வந்தது. செய்வதறியாமல் திகைத்த தில்லைவாழ்
அந்தணர்கள், நடராஜர் விக்ரஹத்தை துணியில் சுற்றிக் கொண்டு மலையாளக் கரையோரம் சென்றனர். ஒரு ஆலமரத்தின் பொந்தில் மறைத்து வைத்தனர். சிலகாலம் நடராஜர் சிலை அங்கேயே இருந்தது. பூஜைகள் அந்த இடத்திலேயே நடந்து வந்தன. நடராஜர் தங்கியிருந்த ஆலமரப் பொந்தே கேரளத்தில் 'ஆலப்புழா' என்று அழைக்கப்படுகிறது. ங்கிலேயேர் காலத்தில் பிரெஞ்சுக்காரர்களின் கோட்டையாக சிதம்பரம் கோயில் இருந்தது. அப்போது தஞ்சை மன்னர், நடராஜப்பெருமானை பாதுகாப்பு கருதி திருவாரூருக்கு கொண்டு சென்று விட்டார். அங்கு நடராஜர் சிலை இருந்த இடம் 'சபாபதி மண்டபம்' என்று அழைக்கப்படுகிறது.
ஆடுவது எதற்காக?
ஒருமுறை உலகம் அழியும் நேரத்தில், சிவபெருமான் உலகத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டார். 'உயிர்கள் அனைத்திற்கும் ஓய்வு கொடுத்துவிட்டோம். இனிப் பிறவிக்கடலில் தத்தளிக்காமல்
பேரமைதியில் இருக்கட்டும்' என்று எண்ணினார். அப்போது ஒவ்வொரு உயிரின் தலையிலும் அவை அனுபவிக்கவேண்டிய வினைப்பயன் எழுதப்பட்டிருப்பதைக் கண்டதும், 'அம்மம்மா! இப்பெரிய வினைமூட்டைகளை உயிர்களால் தாங்க முடியாதே! விரைவில் அவற்றை கரைத்து உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று விருப்பம் கெண்டார். அவரிடம் கருணை ஊற்றெடுத்தது. மீண்டும் உயிர்களுக்கு
அவரவர் வினைப்பயனுக்குரிய கருவி கரணங்களைத் தந்து பிறவியெடுக்கச் செய்தார். அந்த மகிழ்ச்சியில் தாண்டவம் ஆடினார். அதுவே ஆனந்ததாண்டவம். இப்படி நமக்காக துவங்கிய ஆட்டம், இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதாக ஐதீகம்.