
தகவல்கள் - கேளுங்க சொல்கிறோம் = வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
* "சந்தியா வந்தனம்' என்றால் என்ன?சு.முருகேசன், மதுரை
"சந்தி' என்றால் "சந்திப்பு' என்று பொருள். "ஜங்ஷன்' என்கிறோமே அதுபோல. இரவும் காலையும் சந்திக்கும் விடியற்காலை பொழுது, காலையும் மாலையும் சந்திக்கும் பகல் உச்சிப்பொழுது, மாலையும் இரவும் சந்திக்கும் சாயங்காலம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் "சந்தி' அல்லது "சந்தியா' என்று பெயர். இம்மூன்று சந்தியா காலங்களில் அனுஷ்டானம் செய்து கடவுள் வந்தனம் செய்வதற்கு "சந்தியாவந்தனம்' என்று பெயர். இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும்.
* என் மகனுக்கு ஆயில்ய நட்சத்திரம் என்று கூறி மணப்பெண் அமைவதில் தாமதம் காணப்படுகிறது. மாமியாருக்கு தோஷம் என்கிறார்கள். இதற்கு என்ன செய்வது? பெயர் வெளியிட விரும்பாத வாசகி, கம்பம்
பொதுவாக சில நட்சத்திரங்கள் தோஷமுடையவை என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நட்சத்திரத்தின் எத்தனையாவது பாதத்தில் பிறந்திருக்கிறார்கள் என்பதையும், ஜாதகத்தில் 7ம் இடம், 8ம் இடம் பலனையும் கொண்டு கணிக்க வேண்டும். பின் கூறிய விஷயங்கள் நன்றாக அமைந்திருந்தால் நட்சத்திர தோஷம் பார்க்க வேண்டாம். இன்னொரு விஷயம். ஆண்பிள்ளைகளுக்கு இதுபோன்ற ஆயில்ய நட்சத்திர தோஷமெல்லாம் கிடையாது. மக்கள் மனதில் ஊறிப்போய்விட்ட சில விஷயங்களை மாற்ற சாஸ்திரங்களுக்கே வலிமை கிடையாது போலத் தோன்றுகிறது. எல்லா தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற செவ்வாய்க்கிழமை ராகுகால வேளையில் (மாலை 3-4.30) துர்க்கைக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
* உள்ளத்திலிருந்து "நான் ' என்ற அகந்தையை அழிப்பது எப்படி? டி.பூபதிராவ், காஞ்சிபுரம்
அறிவு செம்மைப்படும்பொழுது "நான்' என்னும் அகந்தை தானே அகன்றுவிடும். நல்ல நூல்களைப் படித்தல், பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு பின்பற்றுதல், அனுபவங்களினால் பக்குவப்படுதல் இவை மூன்றோடு, தெய்வபக்தியும் இருந்தால் கண்டிப்பாக அறிவு செம்மைப்பட்டு பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கும். இந்த நிலையிலிருந்து பெரிய செயல்களை செய்பவர்களின் வாழ்க்கையில் வெற்றிதான். "நான், நான்' என்று பிதற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு யாரும் துணைசெய்ய விரும்பமாட்டார்கள். அகந்தை உடையவர்களுக்கு கடைசியில் தோல்வியே ஏற்படும். தன்னம்பிக்கையையும் கடவுள் பக்தியையும் வளர்த்துக்கொள்ளுங்கள். "நான்' அழிந்துவிடும்.
* சிவாலயங்களில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் நடப்பதன் கருத்து என்ன? எஸ்.சாந்தி, விழுப்புரம்
சிவபெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாதத்திற்குரிய நட்சத்திரத்தில் ஒவ்வொரு வகையான அபிஷேகம் செய்ய வேண்டும் என "மாச பூஜா விதி படலம்' என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அனேகமாக பவுர்ணமியும் சேர்ந்தே வரும். ஓரிரு நாட்கள் முன் பின்னாகவும் வரலாம். வைத்தீஸ்வரன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில், திருவையாறு ஐயாரப்பர் கோயில் போன்றவற்றில் 12 மாத அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம்
பருவமழை பொழிந்தால்தான் பயிர்கள் செழித்து உணவுப்பொருள் கிடைக்கும். இதனை வேண்டியே சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் உணவுக்கு கஷ்டப்படும் உயிரினங்களுக்கும் அபிஷேகம் செய்த அன்னத்தை அளிக்கும் ஜீவகாருண்யமும் இதில் அடங்கும்.