காளி வழிபாடு தொன்றுதொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. காளிகோயில்கள் பெரும்பாலும் தனித்தே காணப்படும். ஒரு சில சிவன் கோயில்களிலும் காளிதேவி அருள்பாலிக்கிறாள். இவள் கலியுக தெய்வம். தன்னை நம்பியவர்களை இவள் கைவிடமாட்டாள். விரதங்களைக் கடைபிடித்தல், பலியிடுதல், தீமிதித்தல் ஆகிய வழிபாடுகள் இவளைச் சார்ந்தவை. பத்ரகாளி, மாகாளி, பிடாரி, எல்லையம்மன், வடக்குவாசல் செல்வி, ஆயா செல்லியம்மன், மகமாயி என்றெல்லாம் இவளை அழைப்பர். 'காலீ' என்று இவளை முதலில் அழைத்தனர். இதற்கு 'காலத்தின் வடிவமானவள்' என்று பொருள். பின்னர் 'காளி' என மாறியது. இதற்கு 'கருப்பானவள்' என்று பொருள். சிவபெருமானை நோக்கி இவள் கடும் தவம் புரிந்து, தன் கருப்பு நிறத்தை மாற்றி பொன்னுடல் பெற்றாள். இதன் பிறகு இவள் 'கவுரி' எனப்பட்டாள். 'கவுரி' என்றால் 'தங்க உடல் பெற்றவள்' எனப் பொருள். நீங்கிய கருப்பு நிறம் 'கவுசகி' என்ற பெயர் பெற்று மீண்டும் காளியாயிற்று. சிவபுராணத்தில் காளியை 'ஆதி காளி' என்கின்றனர். ஜைன, புத்த மதங்களில் 24 யட்சிகளின் பெயர் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒருத்திக்கு 'மகாகாளி' என்று பெயர். அதாவது, காலத்தால் அழிக்க முடியாத தெய்வமாக இவள் விளங்குகிறாள். பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பாளே தவிர, இவளைப் போல குணவதி யாருமில்லை. நல்லவருக்கு நல்லவள், கெட்டவருக்கே மகாகெட்டவளாக இவள் விளங்குகிறாள்