
இளைய வாசகர்களே! இலக்கிய வாசனையை நுகர ஆரம்பித்து விட்டால், நாவல்களைப் படிப்பது போல் நமது ஆர்வம் மேலிடும். நீங்கள் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும்போது, அதற்கு பதிலளிக்கவும் உதவும். நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்த பகுதியில் சுருக்கமாகப் பார்க்கலாம்.
ஆத்திச்சூடி
அவ்வையார் எழுதிய நீதிநூல்கள் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை
ஆகியவை. 'ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே' என்ற வரியுடன் துவங்கும் கடவுள் வாழ்த்துப் பாடலின் துவக்க வார்த்தையை இந்நூலுக்கு பெயராகச் சூட்டினர். 'ஆத்தி' என்பதற்கு 'விநாயகர்' என்றும் பொருளுண்டு. முழுமுதல் கடவுளான விநாயகரை குழந்தைகள் மிகவும் விரும்புவர். எனவே, குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும் இந்தப் பாடலுக்கு 'ஆத்திசூடி' என பெயர் சூட்டினர். இந்த நூலில் 109 நூற்பாக்கள் உள்ளன.
முத்தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் என்ற நூல் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பொதுவான நிலை பற்றி பாடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எந்த மன்னருடைய பெயரும் இதில் இடம் பெறவில்லை. இந்தக் காப்பியத்தைப் படைத்தவர் பற்றிய விபரம் தெரியவில்லை. ஒரு நாட்டின் மன்னருக்கு 900 பாடல்கள் வீதம் 2700 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், கிடைத்ததோ 110 பாடல்கள் தான்.
சீவக சிந்தாமணி
சமண சமயத்தைச் சேர்ந்த திருத்தக்க தேவர் எழுதியது சீவக சிந்தாமணி. சீவகன் என்பவனின் வரலாற்றைக் கூறுகிறது. சத்திர சூடாமணி, சத்ய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களை தழுவி இக்காப்பியம் எழுதப்பட்டது. இதில் 13 இலம்பகங்கள் உள்ளன. 'இலம்பகம்' என்பதற்கு 'பேறு' என்று பொருள். ஒவ்வொரு இலம்பகமும் காப்பிய பாட்டுடைத் தலைவன் சீவகன் அடைந்த ஒரு பேற்றை விளக்குகிறது. காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை இந்நூலின் கதாநாயகனானசீவகன் மணம் செய்து கொண்டான். அதனால், இதற்கு 'மணநூல்' என்ற சிறப்புப்பெயரும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய வாழ்வில் அடைய வேண்டிய முக்கியப் பொருட்களைப் பற்றி இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இதை 'முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்' என்றும் சொல்வர். இந்நூலின் காலம் பத்தாம் நூற்றாண்டு ஆகும். அன்றைய அரசியல், ஆட்சியியல், கற்பு வாழ்க்கை, களவு வாழ்க்கை, நாட்டு வளம், நகர் வளம் ஆகியவற்றை விளக்கும் இந்நூல் ஒரு சமுதாய நூலாக விளங்குகிறது. ''கிரேக்க மொழியில் உள்ள இலியட், ஒடிசி காப்பியங்களுக்கு இணையானது,'' என வெளிநாட்டு தமிழ் ஆர்வலர் ஜி.யு.போப் இக்காப்பியத்தை பாராட்டியுள்ளார். தேம்பாவணி என்னும் காவியம் படைத்த வீரமாமுனிவர், இந்நூல் ஆசிரியர் திருத்தக்க தேவரை 'தமிழ்ப் புலவர்களில் தலைமை சான்றவர்' என புகழ்ந்துள்ளார். இக் காப்பியத்திற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் என்னும் புலவர் ஆவார்.