ADDED : ஏப் 25, 2014 01:06 PM

* நைவேத்யத்தை வீட்டில் சமைத்து கோயிலுக்கு எடுத்துச் செல்லலாமா?
எம். பத்மாவதி, மதுரை
கோயில் மடப்பள்ளியில் சமைப்பதே உசிதமானது. இதற்கென சில சம்பிரதாயங்களும் உண்டு. அடுப்பில் எரியும் அக்னி கூட, வேள்வி சம்பந்தமுடையதாக இருக்க வேண்டும். இன்னும் சில பெரிய திருக்கோயில்களில் மடப்பள்ளியில் யாக குண்டம் ஒன்று இருக்கும். அதிலிருந்து அக்னி எடுத்து தீ மூட்டி அதில் சமைத்து நைவேத்யம் தயாரிப்பார்கள். பரிசாரகர்கள் என்று அழைக்கப்படும் தகுதி வாய்ந்த சமையல்காரர்கள் ஆசாரத்துடன் சமைத்து நைவேத்யத்தை சந்நிதிக்கு எடுத்து வர வேண்டும்.
இப்படி எடுத்து வரும்போது மங்கள வாத்தியம், குடை, தீவர்த்தி உடன் வரும். இதற்கென மன்னர்கள் நிவந்தம் அளித்த கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ஆனால், இன்றைய சூழ்நிலையில் பரிசாகரர் கிடைப்பது அரிதாகி விட்டது. ஒரே அர்ச்சகர், கோயில் பணி முழுவதையும் செய்ய நேர்வதால், வீட்டிலேயே நைவேத்யம் தயாரிக்கும் சூழல் உண்டாகி விட்டது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், சுவாமிக்கு நைவேத்யமானால் போதும் என்ற நிலையில், அர்ச்சகர் வீட்டில் தயாரித்து நைவேத்யம் செய்வதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
* கடனைத் திரும்ப செலுத்த ஏற்ற ஹோரை இருக்கிறது என்கிறார்களே. உண்மையா?
கே. விஜயலட்சுமி, மாங்காடு
அப்பாடா! கடன் தொல்லை என்ற சொல்லை உபயோகிக்காதவர் என்ற பெருமை அடைகிறீர்கள்.மகிழ்ச்சி. செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் திரும்பச் செலுத்த தொடங்கினால், கடன் விரைவில் அடைந்து நிம்மதி பெறுவீர்கள்.
எந்தெந்த தெய்வத்திற்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுவது நல்லது?
உஷா, சென்னை
சாஸ்திர ரீதியாக இது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது வழக்கில் வந்து விட்டது.
** கர்ப்பிணி பெண் வீட்டில் இருந்தால் வீடு கட்டவோ, புதுப்பிக்கவோ கூடாது என்பது ஏன்?
கே.வேலுச்சாமி, தாராபுரம்
குளவிக் கூட்டில் புழு வளர்ந்து குளவியாவது போல, கருவில் குழந்தை வளர்வதால் அதற்கு எவ்விதமான இடையூறும் செய்யக் கூடாது. கர்ப்பகாலத்தில் வீட்டில் குளவி கூடு கட்டியிருந்தால் அதை அகற்றக் கூடாது. அதுபோல், வீடு, கட்டடங்களையும் இடிக்கக் கூடாது. இடிக்கும் போது ஏற்படும் சப்தத்தை கர்ப்பிணிகள் கேட்டால் குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்படலாம் என்கிறது சாஸ்திரம். மருத்துவ ரீதியாகவும் இதைக் கடைபிடிப்பது நல்லதே.
வில்வ இலையை தண்ணீரில் கழுவி எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம்?
பி. எஸ். தேவராஜூ சர்மா, மாடம்பாக்கம்
ஐந்து நாட்கள் வரை உபயோகிப்பது நல்லது. தட்பவெப்பத்தால் கறுத்து விட்டாலோ, அழுகி விட்டாலோ பயன்படுத்த வேண்டாம்.