
** பழக்க தோஷத்தால் தீட்டுக் காலத்திலும் அறியாமலேயே மந்திரம் சொல்லி வருகிறேன். இது குற்றமா?
ஆர்.ஏ.லட்சுமி, மதுரை
பழக்க தோஷம் என்று இதைச் சொல்ல வேண்டாம். சுவாமியிடம் உங்களுக்கு இருக்கும் எல்லையில்லாத அன்பை தெரிவிக்கிறது. நமது அன்பு ஒரு அளவுக்கு மேல் போய்விட்டால், அதாவது மனம் பக்குவப்பட்டு விட்டால் மட்டுமே இது நடக்க வாய்ப்புண்டு. தீட்டுக் காலத்தில் சொல்லக்கூடாது தான். அன்பின் மிகுதியால் அறியாமலேயே மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கும் பக்குவத்தில், இது போன்றவை குற்றம் ஆகாது.
* விரதத்தை உபவாசம் என்பது ஏன்? அதன் பொருள் என்ன?
பி.ராஜ்குமார், விருத்தாச்சலம்
விரதம் வேறு உபவாசம் வேறு. விரதம் என்ற சொல்லுக்கு சிறிதளவு உணவு, பழம் சாப்பிட்டு ஏற்படும் கஷ்டத்தை சகித்துக் கொள்வது. 'வ்ரு' என்பது வேர்ச் சொல்லுக்கு 'கஷ்டம்' என்று பொருள். 'வ்ருதம்' என்பதே விரதம் என்றானது. உபவாசம் என்றால் 'சமீபத்தில் வசிப்பது'. அதாவது முழுமையாக உணவைத் தவிர்த்து, கடவுளின் அருகில் இருப்பதாக கருதுவதாகும். விரதத்தை விட உபவாசம் மேலானது. மாதம் ஒருமுறை இருந்தால் போதும். மனவலிமையும், ஆரோக்கியமும் உண்டாகும். விரத நாளில் வெங்காயம், பூண்டு, மாமிசம் தவிர மற்ற எளிய உணவுகளை அளவு குறைத்து சாப்பிடலாம்.
கொடிமரம் இல்லாத கோயிலில் சுவாமி புறப்பாடு நடத்தலாமா?
என்.பி.குமார், திண்டுக்கல்
தாரளமாகச் செய்யலாம். ஏகதின உற்ஸவம் என்ற அடிப்படையில் சாஸ்திரம் இதை அனுமதிக்கிறது. கொடிமரம் இருந்தால், கொடியேற்றி பத்து நாள் திருவிழா நடத்தலாம்.
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?
ஏ. சரஸ்வதி, திருப்போரூர்
பிரம்ம மந்திரம் ஜபித்து பிரும்மம் எனப்படும் பரம்பொருளை மட்டுமே சிந்தித்து வாழ்பவர் களை பிராமணர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவர்களைக் கொல்லுதல், துன்பப்படுத்துதல் போன்றவை பிரம்ம ஹத்தியாகும். 'ஹத்தி' என்றால் அழித்தல். இதே போன்று போரில் ஒருவரைக் கொன்று விட்டால் வீரஹத்தி தோஷம் என்றும், கருவைக் கலைத்தால் ப்ரூணஹத்தி தோஷம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. எந்த விதத்திலும் யாரையும் கொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. கொல்லாமை என்னும் அகிம்சையே ஆன்மிக வாழ்வின் அடிப்படைத் தத்துவம்.
* பழைய துணிமணிகளை ஏழைகளுக்கு கொடுப்பது தானமாகுமா?
ஆர்.விஸ்வநாதன், சென்னை
ஆகாது. புதிதாக துணிமணி வாங்கிக் கொடுப்பதே வஸ்திர தானம்.