கேளுங்க சொல்கிறோம்! - வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
கேளுங்க சொல்கிறோம்! - வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
ADDED : நவ 11, 2010 04:50 PM
**உயிர்களைப் படைத்தும் காத்தும் அழித்தும் வருபவர் இறைவன் என்றால், உயிர்களின் பணிதான் என்ன? ரா.குருநாதன், திருப்பூர்
''மானிடப்பிறவி தானும் வகுத்தது மணவாக்காயம்
ஆனிடத்தைந்தும் ஆடும் அரன் பணிக்காகவன்றோ'
என்கிறது சைவ சிந்தாந்தம். உயிர்கள் பரிசுத்தமான பிறகு மீண்டும் இப்பூமியில் பிறந்து துன்பப்படாமல் இறைவனோடு கலந்து பேரின்ப நிலையை அடையலாம். உயிர்கள் பக்குவமடைவதற்கே இறைவன் படைத்தல் முதலாகிய முத்தொழில்களைச் செய்கிறார். உயிர்களின் பணி இறைவனுக்குப் பணி செய்வது தான் என்கிறது அப்பாடல்.
* திருமணம் நிச்சயமானபின் தாய் இறைவனடி சேர்ந்துவிட்டார், தம்பியும் ஏற்கனவே இறந்துவிட்டதால் என்னை இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்கவில்லை. இதற்கு பரிகாரம் என்ன? விஜயகுமார், சென்னை
திருமணம் நிச்சயமான பிறகு பிற இடங்களில் நிகழும் துக்க காரியங்களுக்கு வேண்டுமானால் செல்லாமல் இருக்கலாம். பெற்ற தாய் இறந்துவிட்டால் திருமணம் நிச்சயமான காரணம் கூறி இறுதிச் சடங்கு செய்யாமல் இருக்கக் கூடாது. நாம் நமது பெற்றோருக்குச் செய்யும் மிகப் பெரிய பணியே இறுதிச்சடங்கு தான். இதற்கு எந்தக் காரணமும் தடையாக இருப்பதில்லை. மேற்கொண்டு செய்ய வேண்டியதையாவது விஷயம் தெரிந்தவர்களிடம் ஆலோசித்துச் செய்யுங்கள்.
*சுபநிகழ்ச்சிகளைத் தேய்பிறை நாட்களில் செய்யக்கூடாது என்று சொல்வதன் காரணம் என்ன? டி.சிவசங்கரகோமதி, சிவகாசி
நட்சத்திரங்களுக்கு அதிபதி சந்திரன். நாள் நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்யும்பொழுது அவற்றின் தலைவனாகிய சந்திரன் வளர்பிறையாக அதாவது பலமுள்ளவனாக இருக்க வேண்டும். அதனால் தான் தேய்பிறையில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்கிறார்கள். தேய்பிறை நாட்களில் சப்தமி வரை சுபகாரியங்கள் செய்யலாம்.
*ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றுவதற்கு வழிமுறை கூறுங்கள்? எஸ்.கோவிந்தராஜன், கோயம்புத்தூர்
முதலில் நல்ல ஆன்மிகவாதியை குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆசாரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே நல்ல சிந்தனைகள் தோன்றும். இந்நிலையில்
குருநாதரின்உபதேசங்களைக்கேட்டு அனுஷ்டானங்களைச் செய்யப் பழகிக் கொண்டால் நீங்களே ஒரு சிறந்த ஆன்மிகவாதியாகி விடுவீர்கள். மனப்பக்குவம் இருந்தால்
எல்லாமே எளியவை த õன்.
* குழந்தைகள் படிப்பில் முன்னேற என்ன மந்திரம் கூறி வழிபட வேண்டும்?
க.பாலசுப்பிரமணியன், ராமேஸ்வரம்
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவான வார்த்தைகள் தான் முதல் மந்திரம். குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லிக் கொடுங்கள்.
''சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா''
* ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் பலர் சந்தோஷமாக இருக்கும் போது, திருமணத்திற்கு ஜாதகம் அவசியம் தானா? பி.கார்த்திக், திண்டிவனம்
முன்பின் அறியாத ஒரு ஆணும், பெண்ணும் கணவன், மனைவியாக வாழ்க்கையில் இணைகிறார்கள். மனம் ஒத்து வாழ்க்கை நடத்துவது, பிள்ளைப்பேறு, அவர்களின் எதிர்காலம் இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ள வசதியாக இருப்பது ஜாதகம். இருவரின் ஜாதகமும் ஒரே மாதிரியாக இருந்து பொருந்தியிருந்தால் பெற்றோர்களும் கவலையில்லாமல் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். புதுமணத் தம்பதிகளும் மகிழ்ச்சியாக வாழ்வர். இதுவல்லாமல் தாங்களே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பவர்களும், பெற்றோர்கள் அனுமதியுடன் மனப்பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்து கெ õள்பவர்களும் உண்டு. இவை ஒரு காரணத்தினால் நிகழ்ந்து விடுகிற காரியம். ''தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு செய்கிறோம்'' என்று பெற்றோர்கள் ஒரு வித பயத்துடனேயே சொல்லிக் கொண்டிருப்பர். நிம்மதியாக திருமணம் நிகழ பெரியவர்கள் கூறுகிறபடி ஜாதகம் பார்த்து செய்வதே சிறந்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சுவாமியுடன் பூ உத்தரவு கேட்டு செய்யலாம். தாங்கள் கேட்பது மூன்றாவது நிலை, தெய்வம்
காப்பாற்றட்டும். இவ்வளவு சிரத்தையாகக் கேட்டிருப்பதைப் பார்த்தால் வேறு ஏதோ ஏற்பாடு நடப்பது போல தெரிகிறது. பெற்றோர்களிடம் கூறிவிடுங்களேன்.