ADDED : மே 01, 2016 11:10 AM

* பைரவர் ஆடையின்றி காட்சியளிப்பது ஏன்?
எஸ்.குமார் குனியமுத்தூர்.
பைரவருக்கு 'திகம்பரர்' என்று பெயர். திக்+அம்பரர். 'திக்' என்றால் திசைகள். 'அம்பரர்' என்றால் ஆடையாக உடையவர். அதாவது எட்டு திசைகளையும் ஆடையாக உடுப்பவர் என்று பொருள். அதனால் பைரவருக்கு சாதாரண வஸ்திரங்களை அணிவிப்பதில்லை.
* நல்லவர்களை கடவுள் சோதிப்பது ஏன்?
க.கார்த்திகா கடலூர்.
நல்லவர்கள் தங்கம் போன்றவர்கள். தீயவர்கள் துரு பிடித்த தகரம் போன்றவர்கள். தங்கம் விலை மதிப்பற்றது. எல்லாராலும் விரும்பப்படுவது. அது சொக்கத் தங்கமாக ஜொலிப்பதற்கு காரணம் பலமுறை நெருப்பிலிட்டு மாற்று அடிப்பதால் தான். அதுபோல், நல்லவர்களுக்கு சோதனை தருவதன் மூலம் கடவுள் அவர்களை மேலும் தங்கமாக்குகிறார். துருபிடித்த தகரம் எதற்கும் பயன்படாதது போல் இப்பிறவியில் தீயவர்களுக்கு என்ன தான் சோதனை தந்தாலும், அவர்கள் திருந்த மாட்டார்கள் என்றுதான் கடவுள் அவர்களைக் கண்டு கொள்வதில்லை போலும்! யாருக்கு சோதனைகள் அதிகமாக ஏற்படுகிறதோ அவர் அருகில் சுவாமி இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பரிகாரமாக வாழை மரத்துக்கு கல்யாணம் நடத்துவது ஏன்?
வி.எம்.சாமி புதுச்சேரி.
ஜாதகத்தில் களத்திரதோஷம் அல்லது பர்த்ரு தோஷம் என ஒன்று உண்டு. அதாவது பெண் ஜாதகமானால் கணவனுக்கும், ஆண் ஜாதகமானால் மனைவிக்கும் ஆயுள் கண்டம் ஏற்படும். இப்படி நிகழ்ந்தால் வேறு திருமணம் செய்ய வேண்டிய சூழல் வரும். அதைத் தடுக்க 'கதலீ விவாகம்' என முதலில் வாழை மரத்துக்கு கல்யாணம் செய்து பிறகு முறையான திருமணம் செய்தால் அது இரண்டாவது திருமணத்துக்கு ஒப்பானதாகி தோஷம் நீங்கி விடும் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை.
துளசியை ஆண்கள் மட்டுமே பறிக்க வேண்டும் என்பது உண்மையா?
எஸ். பிரமிளா, சென்னை.
பெண்கள் துளசி பூஜை செய்யலாம். துளசி குறித்த ஸ்லோகங்கள் சொல்லலாம். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். ஆனால் துளசியை பறிக்கக்கூடாது. ஆண்களும் மதியத்திற்கு மேல் பறிக்கக்கூடாது என்று ஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மா எழுதிய துளசி சரிதம் நூலில் குறிக்கப்பட்டுள்ளது.
** ஜீவ சமாதி என்பதன் பொருள் என்ன?
ஜி.கார்த்திகேயன் சரவணம்பட்டி.
'சமாதி' என்பதை விட 'ஸமாதி' என்பதே சரி. 'ஸம' என்றால் பக்குவப்படுதல் என்று பொருள். 'தி' என்றால் அறிவு. அதாவது இறைவன் திருவடியைத் தவிர வேறு எதுவுமே நிரந்தரமில்லை என்ற மேலான பக்குவமே 'ஸமாதி' என சித்தாந்தம் கூறுகிறது. துறவிகளும், மகான்களும் இப்படி வாழ்ந்ததை நாம் படித்திருக்கிறோம்.
அதாவது ஜீவ= வாழ்க்கை. ஸமாதி= பக்குவப்பட்டு வாழ்க்கையிலிருந்து விலகி நிற்றல். மகான்கள் இறந்தால் ஸமாதிஅடைந்தார் என்று கூறுவதும் இதன் அடிப்படையில் தான். உண்மையில் இறப்பதற்கு முன்பே அன்ன ஆகாரமில்லாமல் தவயோக நிலையில் இருந்து இறைவன் திருவடி அடைந்தவர்களையே ஜீவ ஸமாதியடைந்தார் என்று கூற வேண்டும். இவர்களே முனிவர்கள், சித்தர்கள் என போற்றப்படுவர்.
