ADDED : ஜூன் 08, 2016 11:58 AM

சுவாமிக்கு சந்தனஅபிஷேகம் மட்டும் கடைசியாக செய்வது ஏன்?
ஜி.கண்ணாத்தாள், திருச்சுழி.
சந்தனத்தை பன்னீரில் கலந்து நிறைவாக அபிஷேகம் செய்வதால் அதன் நறுமணம் சுவாமி மீது இருந்து கொண்டே இருக்கும். மேலும் எல்லா திரவியங்களினாலும் அபிஷேகம் செய்து விட்டு கடைசியாக சந்தனாபிஷேகம் செய்யவேண்டும் என சாத்திரங்களும் கூறுகின்றன.
சங்கு சக்கரம் கொண்ட விநாயகர் படம் பார்த்தேன். அதுபற்றி சொல்லுங்கள்.
எஸ்.ராமதுரை, சிதம்பரம்.
இப்போது விநாயகரின் வடிவங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு விதவிதமாய் வெளிவருகிறது. மக்களும் வாங்கி அவர்களை ஊக்குவிக்கிறார்கள். பழைய படங்களை பயன்படுத்தினால் போதும்.
* சிதிலமடைந்த பழைய கோவில்களில் வழிபாடு செய்யலாமா?
அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்.
கட்டாயம் செய்ய வேண்டும். ஆனால் அத்துடன் நிறுத்தி விடாமல், விரைவில் கோவிலைப் புதுப்பித்து தினசரி பூஜைகள் நடைபெற முயற்சி செய்வது மிகவும் அவசியம். இதனால் ஊரிலுள்ள அனைவருக்கும் நன்மை உண்டாகும்.
வீட்டுக் கொல்லையில் நெல்லிமரம் வளர்க்கலாமா?
எஸ்.விஜயா, ஈக்காட்டுத்தாங்கல்.
நெல்லி மட்டுமல்ல... மா, பலா, வில்வம், துளசி, வேம்பு, தென்னை மற்றும் பூச்செடிகளும் வளர்க்கலாம்.
** பெண் குழந்தைகளுக்கு நதிகளின் பெயரை வைப்பது கூடாது என்பது உண்மையா?
சுஜாதா சிவகுமார், மதுரை.
நதிகளை தாயாகப் போற்றுவது நம் இந்து தர்மம். தாயின் பெயரை குழந்தைக்கு வைப்பது போன்றது நதிகளின் பெயரை சூட்டுவது. தாராளமாக நதிகளின் பெயரை பெண் குழந்தைகளுக்கு வைக்கலாம்.
* சிவாலய வழிபாட்டில் தட்சிணாமூர்த்தி, காலபைரவர் வழிபாடு முக்கியமா?
பி.ரங்கநாதன், சென்னை.
ஒரு கோவிலுக்குச் சென்றால் இது முக்கியம், அது முக்கியம் என்ற என்ற குழப்பமே கூடாது. ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு விதமான பலன் வழங்குவர். மின்சாரம் ஒன்றுதான். நாற்பது வாட்ஸ் பல்பில் இணைப்புகொடுத்தால் அதற்கான ஒளி மட்டும் வழங்குகிறது. மின் விசிறியானால் காற்று வீசுகிறது. 'டிவி'யில் படம் காட்டுகிறது. இது போல தெய்வ சக்திகளும் மாறுபட்ட பலன் தரும். தட்சிணாமூர்த்தி அறிவையும், பைரவர் பயத்தை அகற்றியும் அருள் செய்வர். எனவே எல்லா தெய்வங்களையும் வழிபட்டு முழுமையான பலன் பெற வேண்டும்.
