ADDED : ஜூன் 12, 2016 03:08 PM

** இழந்த பணத்தை மீண்டும் பெற பரிகாரம் ஏதும் உண்டா?
கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.
கார்த்தவீரியார்ஜுனன் என்ற தெய்வத்தின் மந்திரத்தை தினமும் ஜபித்தால் இழந்த மற்றும் காணாமல் போன பணம் நகை பொருள் எல்லாமே மீண்டும் கிடைக்கும்.
“கார்த்தவீர்யார்ஜுணோ நாம ராஜாபாஹு ஸஹஸ்ரவான்!
தஸ்ய ஸ்மரன மாத்னே ஹ்ருதம் நஷ்டம் சலப்யதே!
இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள், “ஆயிரம் கைகளைஉடைய கார்த்தவீர்யார்ஜுணனே! அரசருக்கு அரசராகிய தெய்வமே! உம்மை மனதில் எண்ணி வழிபடும் எனக்கு பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. நான் இழந்தவற்றை திருப்பித் தந்து அருள்வீராக'' என்று சொல்லி வழிபடலாம்.
பிரசவித்த பெண் எப்போது கோவில் தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்?
கோல்டன் தேவதை, குனியமுத்தூர்.
குழந்தை பிறந்து 22 நாட்கள் தீட்டு கழித்து குளித்தபிறகு தான் அடுப்பைத் தொட்டு சமைக்கலாம். நாற்பதாம் நாள் குளியல்முறை முடிந்த பிறகு, கோவிலுக்குச் செல்லலாம். இது பொதுவான வழக்கம். குடும்ப வழக்கம் என்ற நிலையில் சில இடங்களில் மாறுபடுவது உண்டு. அதையும் பின்பற்றலாம்.
* மகான்களின் சமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வது ஏன்?
அ.யாழினி பர்வதம், சென்னை.
மகான்கள் தம்மையே சிவபெருமானாக கருதி சிவபெருமானை பூஜித்தும் சர்வகாலமும் அந்த சிந்தனையுடனும் வாழ்ந்தவர்கள். அவர்கள் இறந்தபிறகு அவர்களை சிவனாகவே எண்ணி வழிபடுவதற்காகவே சமாதிலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள்.
* கடவுளிடம் எதை வேண்டிக் கொள்ளக் கூடாது?
பே.ராமலட்சுமி, ராஜபாளையம்.
தாயுமானவர் பராபரக்கண்ணியில், 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்று கடவுளிடம் வேண்டுகிறார். திருமூலரும் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று அனைவரும் இன்பமுடன் வாழ பிரார்த்திக்கிறார். மற்றவர் நலனுக்காக வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பதே பக்தியின் அடிப்படை. ஒருவன் நமக்கு துன்பமே இழைத்தாலும் கூட, அவனுக்கும் தீங்கு உண்டாகட்டும், அவனைத் தட்டிக்கேள் என்ற விதத்தில் மட்டும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளக்கூடாது.
