ADDED : ஆக 11, 2016 11:26 AM

** நாள், நட்சத்திரம் பார்த்து நடத்தும் நல்ல செயல்கள் கூட சில நேரத்தில் தோல்வியாகி விடுகிறதே... ஏன்?
பாப்பா, உளுந்தூர்பேட்டை.
விதை விதைப்பதும், தண்ணீர் பாய்ச்சி காப்பதும் தான் நம் செயல். விளைச்சலைத்தருவது ஆண்டவன் செயல். இது போன்று தான் தங்கள் கேள்வியும். நாம் என்ன தான் நாள் நட்சத்திரம் பார்த்து நல்லது செய்தாலும் அவரவர் முன்வினைப்பயனின் அடிப்படையில் தான் தீதும், நன்றும் அமையும்.
* கை கால் கழுவியதும் ஈரத்துடன் அமர்ந்து உண்ணக்கூடாது என்பது ஏன்?
ஏ.எஸ் ராஜேந்திரன், விருதுநகர்.
அப்படி ஏதும் கட்டாயமில்லை. குளித்து விட்டு ஈரத்துணியுடன் பூஜை செய்வது, சாப்பிடுவது ஆகியவை தான் கூடாது. காய்ந்த உடை உடுத்தி நெற்றித் திலகமிட்டு இறைவனை வழிபட்டு உண்பதும் ஒரு மரபாக அக்காலத்தில் இருந்து பின்பற்றப்படுகிறது.
உபநயனம் என்னும் பூணூல் கல்யாணத்தை எந்த வயதில் நடத்த வேண்டும்?
எஸ்.ராமன், கூடுவாஞ்சேரி.
'கர்ப்பாஷ்டமேஷு ப்ராம்மணா: என்று ஒவ்வொரு சமுதாயத்திற்கான உபநயன வயது கூறப்பட்டுள்ளது.
கர்ப்பத்தில் இருக்கும் காலத்தையும் ஒரு வயதாகக் கணக்கிட்டால் ஏழாவது வயதில் எட்டு வயதாகக் கணக்கிட்டு பூணூல் கல்யாணம் நிகழ்த்த வேண்டும். அதற்கு மேற்பட்டு வயது வரம்புகள் கூறப்படாததால் இதைப்பற்றி வழக்கில் உள்ளதையே ஏற்றுக் கொள்ள வேண்டியதாயுள்ளது. ஒற்றைப்படை வயதில் போடுவது என்பதும் வழக்கில் உள்ளது தான். அதாவது ஏழாவது வயதில் பூணூல் போடவேண்டும் என்பது கட்டாயம். இயலாதவர்கள் வழக்கில் உள்ளவைகளை பெரியவர்களைக் கலந்து செய்து கொள்ளலாம்.
* வெளியில் புறப்படும்போது எங்கே போகிறீர்கள் என்று கேட்கக் கூடாது என்பது ஏன்?
ப.செல்வன், காஞ்சிபுரம்.
சகுனம் பார்ப்பது என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையான விஷயம். கால் இடறுவது, பூனை குறுக்கே செல்வது போன்று எத்தனையோ விஷயங்கள் வழக்கில் உள்ளன. இது போன்று தான் கிளம்பும் போது எங்கே போறீங்க என்பதும். அதற்காக குழந்தைகள் இப்படி கேட்பதையெல்லாம் கணக்கில் கொள்ளக்கூடாது. இது ஒரு சகுனத்தடை என்பதைத் தவிர விசேஷ காரணம் ஏதுமில்லை. அப்படி யாராவது கேட்டால், சற்று அமர்ந்து தண்ணீர் பருகினால் பரிகாரம் ஆகிவிடும். பயணத்தைத் துவங்கலாம்.
சகுனம் சரியில்லாதபோது வெளியூர் பயணம் மேற்கொள்ள என்ன செய்யவேண்டும்?
எம்.ராமலிங்கம், விழுப்புரம்.
சிறிது நேரம் அமர்ந்து தண்ணீர் பருகி இறைவனை வழிபட்டு மனத்தெளிவுடன் மீண்டும் பயணத்தைத் துவங்கலாம்.
