ADDED : அக் 27, 2016 03:01 PM

* பூஜையறையில் பிள்ளையார் சிலை வைத்து பூஜிக்கலாமா?
ஆர்.நிரஞ்சனா, கூடுவாஞ்சேரி.
பிள்ளையாரை சிலையாக வைத்து வழிபடுவதானால், தினமும் தண்ணீர், பால் அபிஷேகம் செய்து வழிபடவேண்டும்.
** அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தில் மீதியை கோவிலில் விட்டு வருவது சரிதானா?
ஏ.ஜோஷிகா, நெய்வேலி.
கோவிலில் தரப்படும் விபூதி, குங்குமத்தை இட்டுக்கொண்டது போக மீதியை வீட்டிற்கு எடுத்துச்சென்று எல்லோருக்கும் கொடுப்பது தான் முறை. கோவிலிலேயே விட்டு வருவது தவறு. பெரும்பாலும் கோவிலின் தூய்மையை பாதிக்கும் விதமாக தூண்களிலும் சுவர்களிலும் போடுவது பெரிய பாவம். இதைத் தவிர்ப்பதற்காக அனேக கோவில்களில் கிண்ணங்கள் வைத்துள்ளனர். அதையும் பயன்படுத்தாமல் தூண்களில் கொட்டினால், அதை வடித்த சிற்பியின் ஆத்மா என்ன பாடுபடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சில கோவில்களில் பேப்பர் கொடுத்து அதில் மடித்து எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்துகிறார்கள். இதை சிலர் தொண்டாகவும் செய்கிறார்கள். கோவில் தூண்களிலும், கண்ட இடங்களிலும் திருநீறு, குங்குமத்தைக் கொட்டி கடவுளின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது
* பூட்டிய கோவிலில் வெளியே நின்று வணங்கினால் பலனுண்டா?
ஆர்.நாராயணசாமி, கோவை.
சன்னிதியில் திரை போட்டிருந்தாலும் கதவு சாத்தியிருந்தாலும் தரிசனம் செய்வது கூடாது என்பது பொதுவான விதி. ஆனால் பூட்டிய கோவில் வழியே செல்ல நேரிடும்போது செருப்பைக் கழற்றி விட்டு ஒரு நிமிடம் நின்று வணங்கிச்செல்வது சிறப்பான விஷயம். போகும் காரியமும் நல்லபடியாக நடக்கும். ராஜகோபுரம், விமானங்கள் உள்ள கோவில்களாக இருந்தால் அவற்றை வணங்கிச் செல்லுங்கள்.
* கோவிலில் பக்தர்கள் கொடுக்கும் உணவை வாங்கி உண்ணலாமா?
கே.குமரேசன், தொடர்ந்தனூர்.
அதை உணவு என்று குறிப்பிடாதீர்கள். பிரசாதம் என்று எண்ணிப்பாருங்கள். அதிலும் பக்தர்கள் மனமார கொடுப்பது விசேஷமானது. எந்தக் குறையும் கிடையாது. தாராளமாக வாங்கி சாப்பிடலாம்.
* துளசிமாடம் வைத்து வழிபடுவதால் உண்டாகும் நன்மை என்ன?
ஏ.ஜெயா, மதுரை.
மகாவிஷ்ணுவிற்கு பிரியமானது துளசி. மகாலட்சுமியின் வடிவமும் கூட. எனவே இதை மாடம் கட்டி பூஜிப்பதால் நோய்நொடி இல்லாத சுபிட்சமான வாழ்க்கை அமையும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கன்னியர் வணங்கினால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும்.
