ADDED : பிப் 24, 2017 10:14 AM

* எதிரி பயம் நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?
கே.பார்வதி, கள்ளக்குறிச்சி.
நரசிம்மர், சரபேஸ்வரர், வீரபத்திரர் ஆகிய தெய்வங்களை வழிபட்டால் எதிரிகள் தொல்லையும், பயமும் நீங்கும். யாரையுமே எதிரியாக நினைக்காத நிலைக்கு நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்வதும் சிறந்த பரிகாரம்.
வீட்டில் உக்கிரவடிவ காளி படம் வைத்து பூஜிக்கலாமா?
என்.கே.கனகேஸ்வரி, திருப்பூர்.
கோவிலில் வழிபடவேண்டிய தெய்வமாக தான் பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி உள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபடுவதே நல்லது. வீட்டில் இருக்கும் போது, 'ஓம் காளி ஜெய்காளி' என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
சர்க்கரை நோய் இருப்பதால் விரதம் மேற்கொள்ள இயலவில்லை. விரத பலன் பெற என்ன செய்வது?
ஆ.கண்ணதாசன் வளசரவாக்கம்.
நோயாளிகளுக்கு விரதங்களும், கடுமையான நியமங்களும் தேவையில்லை என சாத்திரங்கள் கூறியுள்ளன. எனவே இதைப்பற்றிய கவலையில்லாமல் முடிந்த வரை வீட்டில் பூஜை செய்யுங்கள். கோவிலுக்கு போய் வாருங்கள். விரதபலனும் கிடைக்கும். நோயும் குணமடையும்.
உற்சவர் சிலையை ஐம்பொன்னில் செய்வது ஏன்?
டி.பத்மா, கோவை.
செம்பு, பஞ்சலோகம், தங்கம், வெள்ளி ஆகியவை தெய்வ சக்தியை ஈர்ப்பவை. இவ்வகை உலோகத் தகடுகளில் அட்சரங்கள் எழுதி, மூலஸ்தான சிலையின் அடியில் வைப்பதும் உண்டு. தெய்வ சக்தியை ஈர்க்கவே இந்த உலோகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
** பெண்களிடம் அதிக பக்தி காணப்படுவது ஏன்?
ஆர்.முத்துராஜா, வடுகப்பட்டி.
இது இயற்கையாகவே அமைந்து விட்ட ஒன்று. தனக்காக என இல்லாமல், குடும்பத்தினருக்காக வழிபாடு, விரதம் என தம்மை வருத்திக் கொள்கிற பெருமை பெண்களுக்கு மட்டுமே உரியது.
* பவுர்ணமிஅன்று கிரிவலம் செல்லாதவர்கள், மற்ற நாளில் வலம் வந்தால் பலன் கிடைக்குமா?
எஸ்.ஸ்ரீவர்ஷன், சென்னை.
பவுர்ணமிஅன்று நிலாக்கதிர்கள் உடலில் படுவது மனஉறுதியை அதிகப்படுத்தும். அதனால் தான் அந்த நாளுக்கு மவுசு அதிகம். அதற்காக மற்ற நாட்களில் மலையின் மகிமை குறைந்து விடாது. பக்தியுடன் வலம் வந்தால் நன்மை கிடைத்து விடும்.
மணமக்கள் மீது மஞ்சள் தடவிய அரிசியை தூவி வாழ்த்துவது ஏன்?
எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
'அட்சதை' என்றால் அழிவில்லாதது. அதாவது குறைவில்லாத மங்களம் மற்றும் சவுபாக்கியத்துடன் புதுமணத்தம்பதிகள் நீடூழி வாழ இந்த மஞ்சள் அரிசியைத் தூவி வாழ்த்துவார்கள்.
ஒரு கோவிலின் கும்பாபிஷேத்தை தரிசிக்க முடியாமல் போனது. அந்த பலனை அடைய வழியுண்டா?
கே.ஆர்.ஜெயலட்சுமி, சென்னை.
கும்பாபிஷேகம் முடிந்த 48வது நாளில் நடத்தப்படும் மண்டல பூஜையில் கலந்து கொள்ளுங்கள். கும்பாபிஷேகத்தை தரிசித்த பலன் கிடைக்கும்.
