ADDED : மார் 10, 2017 12:32 PM

** கடவுளிடம் நம் வேண்டுதலைச் சொன்னால்தான் தெரியுமா?
கு.கோப்பெருந்தேவி, சென்னை.
''வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ'' என்கிறார் மாணிக்கவாசகர். நமக்கு என்ன வேண்டுமோ, அதையறிந்து நாம் கேட்காமலேயே கடவுள் தருவார். ஆனால் கேட்பது நியாயமாக இருக்க வேண்டும்.
* அரோகரா என்பதன் பொருள் என்ன?
எல்.வெங்கடலட்சுமி, கோயம்புத்தூர்.
'ஹர ஹர' என்பதே மருவி அரோகரா ஆகி விட்டது. 'ஹர' என்றால் 'போக்குதல்'. 'எனது கஷ்டங்களையும் பாவங்களையும் போக்கியருள வேண்டும் இறைவா....'என இருமுறை உரக்கச் சொல்வதே அரோகரா கோஷத்தின் பொருள்.
காகம் அடிக்கடி என் தலையில் கொத்திவிட்டுச் செல்கிறது. இதற்குப் பரிகாரம் என்ன?
பி.குமார், சென்னை.
பித்ருதோஷம் அல்லது சனிதோஷம் இருந்தால் இப்படி நடக்கும். சனிக்கிழமைதோறும் உங்கள் சக்திக்கு ஏற்ப ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
அஷ்டமத்து சனிக்கு எளிய பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.
கே.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.
அஷ்டமத்து சனியினால் உடல்நலம் பாதிக்கும். ஆயுள் கண்டங்களும் ஏற்படலாம். திங்கட்கிழமை தோறும் சிவனுக்கு வில்வமாலை சாத்தி வழிபட்டு வாருங்கள். எமனையே சம்ஹாரம் செய்த சிவனருளால் நலமாய் வாழலாம்.
சந்திராஷ்டமத்தன்று பிரச்னையைத் தவிர்க்க என்ன பரிகாரம் செய்யலாம்?
ஏ.பட்சிராஜன், சென்னை.
கவனமாகவும், பொறுமையாகவும் இருப்பதே பெரிய பரிகாரம். காலையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்ட பின், வேலைகளைத் துவங்கினால் பிரச்னை வராது.
கர்ப்பிணிப் பெண் இருக்கும் வீட்டை புதுப்பிக்கக்கூடாது என்பது ஏன்?
கருணாநிதி, நெய்வேலி.
வீட்டைப் புதுப்பித்தல், ஒட்டடைஅடித்தல் போன்றவை செய்யும்போது குளவிக்கூடுகள் மற்றும் ஜீவராசிகள் பாதிக்கப்படும். கருத்தரித்த பெண்ணிருக்கும் வீட்டில், ஜீவராசிகளுக்கு துன்பம் நிகழாமல் இருக்க பெரியவர்கள் இப்படி கூறியுள்ளனர்.
உப்பு வாங்க சிறந்த நாள் எது?
ப.திலகப்பிரியா, கோயம்புத்தூர்.
உப்பில் லட்சுமிவாசம் செய்கிறாள். வெள்ளிக்கிழமை வாங்குவது நல்லது.
தாய்வழி குலதெய்வத்தை, தனது குலதெய்வமாக மகன் வழிபடலாமா?
பே.ராமலட்சுமி, ராஜபாளையம்.
தாராளமாக வணங்கலாம்.
* கோவில் யானையிடம் ஆசி பெறுவதன் நோக்கம் என்ன?
டி.ஜே.குபேந்திரன், பரமக்குடி.
கோவில் யானை ஆணாக இருந்தால் விநாயகராகவும், பெண்ணாக இருந்தால் கஜலட்சுமியாகவும் கருதப்படுகிறது. எனவே ஆசிபெற்றால் விநாயகர், லட்சுமி திருவருள் கிடைக்கும்.
