ADDED : ஏப் 10, 2017 03:15 PM

கிரகதோஷ பரிகாரத்திற்கு சில கோவில்களை மட்டும் குறிப்பிடுவது ஏன்?
எஸ்.பத்மா, சென்னை.
நமது வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கும் கிரகங்களின் வாழ்க்கையிலும், சில சங்கடங்கள் ஏற்பட்டன. அவர்களும் குறிப்பிட்ட கோவில் வழிபாட்டைச் செய்துள்ளனர். அங்கு பரிகாரம் செய்பவர்களுக்கு கிரகங்கள் துணை நிற்கின்றன.
எமதர்மனை வழிபடலாமா?
பி.எஸ்.சங்கர், போத்தனுார்.
எட்டு திசைகளில் எமன் தென்திசைக்கு அதிபதி. இவரை வழிபட்டு வரம்பெற வேண்டிய அவசியமில்லை. எமன்வழிபட்டு வரம் பெற்ற தலங்களை தரிசித்தாலே இவரின் அருளும் கிட்டும். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ளது தருமபுரம் யாழ்மூரிநாத சுவாமி கோவில்.
திருக்கடையூரில் மார்க்கண்டேயரின் உயிரைக் காக்க சிவன், எமனை உதைக்கிறார். சிவனிடம் பாவமன்னிப்பு கேட்டு எமன் வழிபட்டு பேறு பெற்ற தலம் இது. இங்கு சனிக்கிழமை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
* மோதிர விரல் தவிர்த்த மற்ற விரல்களிலும் மோதிரம் அணிவது சரியா?
கே.கனகவிஜயன், மதுரை.
மோதிர விரல் என்ற அடிப்படை பவித்திரம் (தர்ப்பை)அணிவதால் ஏற்பட்ட ஒன்று. மோதிர விரலில் அணிவது சிறப்பு
உச்சி நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்யகூடாதா?
என்.ஜே.தீபிகா, திருப்பூர்.
சூரிய உதயத்தின் போது செய்வது தான் சரி. ஆன்மிக, விஞ்ஞான ரீதியாக உச்சி வெயிலில் செய்வது சரியல்ல. வெயிலின் தன்மை யைப் பொறுத்து,
அதிலிருந்து கிடைக்கும் சக்தி மாறுபடும்.
சிவலிங்கத்திற்கு ஊமத்தம்பூ வைத்து வழிபாடு செய்யலாமா?
கே.அக் ஷய், விழுப்புரம்.
ஊமத்தம்பூ மாலை சிவனுக்கு மிகவும் உகந்தது. கோளறு பதிகத்தில், சம்பந்தர் ''பொன்பொதி மத்தமாலை'' எனக் குறிப்பிடுவது இதைத்தான்.
** மாமியார், மருமகள் ஒற்றுமைக்கு பரிகாரம் எதுவும் இருக்கிறதா?
நா.அன்னலட்சுமி, ராஜபாளையம்.
'டிவி' தொடர் பார்ப்பதை நிறுத்துவது சிறந்த பரிகாரம். தன் மகனை நம்பி வந்திருப்பவளை, மகளாகக் கருதும் பக்குவம் மாமியாருக்கும்,. மாமியாரைத் தாயாகக் கருதும் மனோபாவம் மருமகளுக்கும் வர வேண்டும். 'மருவு மகள்' என்ற சொல்லே, மருமகளாக மருவியுள்ளதை மாமியார்கள் உணர வேண்டும். வேறு பரிகாரம் வேண்டாம்.
* விரதநாளில் உப்பில்லாமல் சாப்பிடுவது ஏன்?
எஸ்.பி.பாலபாரதி, சூளைமேடு
உணவில் உப்பு அளவாக இருப்பது நல்லது. உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் மனம் முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடும். கோபம் போன்ற உணர்ச்சிகள் குறையும். மழை வேண்டி வருணஜெபம் செய்பவர்கள் உப்பு சேர்க்காமல் மந்திரம் சொன்னால் பலன் விரைவில் கிடைக்கும் என காஞ்சிப்பெரியவர் சொல்கிறார்.
வாரத்தின் ஏழு நாட்களில் எந்த கிழமை கடவுளுக்கு உகந்தது?
எஸ்.தனலட்சுமி, விழுப்புரம்
எல்லா கிழமையும் வழிபாட்டுக்கு உகந்தவை. முருகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்தது என்றாலும் மற்ற நாளில் வழிபட்டாலும் பலன் கிடைக்கவே செய்யும்.
வீட்டு தோட்டத்தில் கறிவேப்பிலை மரம் வைக்கலாமா?
வேதசண்முகம், புதுச்சேரி.
வைக்கலாம். சிக்கனமாக வாழ்பவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலையாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் வீட்டில் தான் கறிவேப்பிலை வளரும் என்பது ஒரு நம்பிக்கை.
