ADDED : மே 19, 2017 09:34 AM

விழா காலத்தில் வெளியூர் செல்ல கூடாது என்பது ஏன்?
என்.லட்சுமி, சாத்தூர்.
விரதம் இருப்பவர்கள், காப்பு கட்டியவர்கள் ஊரை விட்டோ, ஆற்றைக் கடந்தோ செல்வது கூடாது. கோவில் கொடியேற்றப்பட்டால் ஊருக்கே காப்பு கட்டியது என நினைக்க வேண்டும். இதை கொடித்தடை என்பர். விழா சமயத்தில் தேவர்கள் வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. தேவர்கள் நம்மிடம் வரும் போது அவர்களை வழிபட்டு, கவுரவிக்காமல் வெளியூர் செல்வது பொருத்தமில்லை.
* தினசரி வீட்டில் வழிபாடு செய்வது கட்டாயமா?
இரா.தங்கராஜ், சிதம்பரம்.
வழிபாடு நம் அன்றாட கடமையாக இருக்க வேண்டும். நாள் முழுவதும் புத்துணர்ச்சி உண்டாகும். பிரச்னையை எதிர்கொள்ளும் நேரத்தில் தளராத உறுதி பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
சண்டிகேஸ்வரரை வழிபட்டால் தான் சிவனை வழிபட்ட பலன் கிடைக்குமாமே ஏன்?
கே.யுவராணி, கடலூர்.
சண்டிகேஸ்வரர் சிவனடியார்களில் முதன்மையானவர். சிவபூஜைக்கு இடையூறு செய்த தந்தையின் காலை துண்டித்தவர். இவரது பக்தியை மெச்சிய சிவன், தாம் உண்பது, உடுத்துவது போன்ற நிர்மால்யத்தை (சுவாமிக்கு சாத்திய பூ, மாலை, பிரசாதம்) வழங்க அருள்புரிந்தார். வழிபடுபவரின் தகுதியறிந்து பலன் அளிக்கும் அதிகாரம் இவருக்குஉண்டு. இவரை வழிபட்டால் மட்டுமே சிவனருளைப் பெற முடியும்.
** அறிவியல் ஒருபுறம் வளர்ந்தாலும், மக்களிடம் பக்தி அதிகரிப்பது எப்படி?
கே.கிஷோர், மதுரை
ஆக்கப்பூர்வமான விஷயங்களில் அறிவைச் செலுத்துவதே அறிவியல். அறிவியலாளர்களும் 'கடவுள் அருளால் இதைக் கண்டுபிடித்தோம்' என்று தான் சொல்கிறார்கள். இறையருளால் தான் எல்லாம் நிகழ்கிறது என்ற உண்மையை இவர்கள் ஒப்புக் கொள்வதால், அறிவியலின் வளர்ச்சியும் பக்தியை வளர்க்கும் கருவியாகவே உள்ளது.
* மகான்களின் கையில் துணி முடிச்சிட்ட குச்சியிருப்பது ஏன்?
யாழினி, அருப்புக்கோட்டை.
மகான்களிடம் மந்திர சக்தி உள்ளது. அவர்கள் அருகில் நல்லமனம், தீய மனம் உள்ள எல்லாரும் செல்கிறார்கள். தீயவர்களால் அவர்களது மந்திர சக்தி பாதிக்கப்படாமல் இருக்க, திரிதண்டம் என்னும் குச்சி வைத்துள்ளனர். இதற்கு ஞான தண்டம், யோக தண்டம் என்னும் பெயர் உண்டு.
நல்ல விஷயமாக செல்லும் போது மூன்று பேராகச் செல்லக் கூடாதா?
ஜி.ராஜி, சென்னை.
சில விஷயங்கள் இப்படித் தான் என வகுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் காரண, காரியத்தை ஆராயாமல் அனுபவத்தில் உணர்வது நல்லது.
வாசனையில்லாத மலர்கள் பூஜைக்கு உகந்ததா?
வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.
அன்றாட பூஜை, விழா காலத்தில் சிறப்பு அலங்காரத்தில் பூக்கள் பயன்படுகின்றன. அன்றாட வழிபாட்டில் வாசனை மிக்க மலர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். சுவாமி புறப்பாட்டிற்குரிய சிறப்பு அலங்காரத்தில் வாசனையில்லாத பூக்களும் பயன்படுத்தலாம்.
