ADDED : ஜூலை 07, 2017 08:25 AM

* கோபம் வராமல் தடுக்க ஏதும் வழிபாடு இருக்கிறதா?
எஸ்.எஸ்.பாஷா, நெய்வேலி.
மனம் பக்குவம் பெற உண்டானதே வழிபாடு. இறைவனை நெருங்க நெருங்க கோபதாபம், தீய எண்ணங்கள், அற்ப ஆசைகள் நம்மை நெருங்காது. தெய்வ வழிபாட்டின் மூலம் தெளிந்த அறிவு உண்டாகும். பிறகு கோபத்துக்கு வேலை இருக்காது.
** இறைவன் மீது பக்தி, பயபக்தி இரண்டில் எது சரியானது?
ஆர். நாராயணசாமி, கோவை.
கருணையே வடிவான இறைவனிடம் பயப்படத் தேவையில்லை. உண்மையான பக்தி செலுத்தினாலே போதும். கோவில் சொத்தைத் திருடுதல், பிறருக்கு துன்பம் அளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தான் பயப்படவேண்டும்.
குருவருள் திருவருள் பெற என்ன செய்ய வேண்டும்?
சோட்டிப்பொண்ணு, திண்டிவனம்.
குருவருள் இருந்தால் திருவருள் தாமே வரும். அதாவது குருநாதரை தெய்வமாக வழிபட வேண்டும். அவரிடம் கருத்து மாறுபாடு, ஆராய்ச்சி போன்றவை கூடாது.
வீட்டிலுள்ள மரத்தை வெள்ளிக்கிழமையில் வெட்டலாமா?
சி.ஆர்.ஜெயந்தி, போத்தனூர்.
வெள்ளிக்கிழமையில் மரம் வெட்டுவது, ஒட்டடையடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பெரியவர்கள் ஆசியளிக்கும் போது எத்திசை நோக்கி நிற்க வேண்டும்?
கே.குப்புசாமி, சங்கராபுரம்.
பெரியவர்கள் கிழக்கு நோக்கி நின்று ஆசியளிக்க வேண்டும். ஆசி பெறுபவர்கள் மேற்கு நோக்கி நின்று வணங்க வேண்டும்.
* பூஜையில் சாமிக்கு சாத்திய பூ, நைவேத்யத்தை எப்போது எடுத்துக் கொள்ளலாம்?
கே.மகேஸ்வரி, பெங்களூரு.
நைவேத்யத்தை பூஜை முடிந்ததும் எடுத்துக்கொள்ளலாம். காலை வழிபாடு செய்தால் மாலையிலும், மாலை வழிபாடு செய்தால் காலையிலும் பூக்களை எடுக்க வேண்டும்.
