ADDED : ஜூலை 28, 2017 10:12 AM

* ஏழரை சனியில் இருந்து தப்பிக்க பரிகாரம் கூறுங்கள்.
சு.செண்பகம், சங்கராபுரம்
ஏழரைச்சனி துன்பத்தை மட்டுமே தரும் என்பது தவறு. இந்தக்காலத்தில் ஏற்றமும் வரும். நமக்கு துன்பம் ஏற்படக் காரணம் நம் முன்வினைப்பயனும் இப்போது செய்யும் செயல்களின் விளைவுமே ஆகும். அதற்குரிய தண்டனையைத் தர வேண்டிய கட்டாயம் சனிபகவானுக்கு உள்ளது. அந்த தண்டனையில் இருந்து தப்பிக்க நம் செயல்களை நேர்மையாக்கிக் கொள்வதுடன், சனிக்கிழமைதோறும் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றியும், அன்னதானமும் செய்தால் கஷ்டத்தின் தாக்கம் குறையும். பிரதோஷ விரதம் இருந்தால் ஏற்றம் ஏற்படும்.
அடுத்தவர் தோட்டத்தில் பூப்பறித்து பூஜைசெய்தால் பலன் உண்டா?
டி.சரோஜா, திருவள்ளூர்.
அவர்களின் அனுமதியுடன் பறித்து பூஜை செய்தால், இரு தரப்புக்கும் பலன் உண்டு. நம் வீட்டில் பூப்பதை வைத்து பூஜிப்பது நல்லது.
அர்ச்சகர் அல்லாதவர் தரும் பிரசாதத்தை சாப்பிடலாமா?
கே.லட்சுமி, விழுப்புரம்.
விபூதி, குங்குமம், தீர்த்தம், துளசி தவிர மற்ற பிரசாதங்களை அர்ச்சகர் அல்லாதவரிடம் பெறலாம்.
பைரவர் வழிபாட்டில் மல்லிகைப்பூவை தவிர்ப்பது ஏன்?
பி.சந்தானம், திருவள்ளூர்
ஒவ்வொரு சுவாமிக்கும் ஏற்ற பூக்கள், தவிர்க்க வேண்டிய பூக்கள் உள்ளன. இந்த விபரம் 'புட்பவிதி' நூலில் உள்ளது.
* பள்ளியறை பூஜை என்பது சுவாமி தூங்குவதற்கு செய்வது தானே!
கே.அபிஷேகா, ராஜபாளையம்.
சுவாமிக்கு செய்யும் எல்லா பூஜைகளுமே அன்பின் மிகுதியால் செய்வது. சுவாமி சாப்பிடுகிறார் என்ற நம்பிக்கையோடு பிரசாதம் படைக்கிறோம். ஆனால் சுவாமி சாப்பிடுவதில்லை. நாம் தானே உண்ணுகிறோம். பள்ளியறை பூஜையும் இப்படித்தான். நாள் முழுவதும் நம் பூஜைகள், வேண்டுதலை ஏற்று களைத்திருக்கும் பகவானை, உறங்கப் பண்ணுவதாக பாவனை செய்கிறோம். சுவாமிக்கு பசி, தூக்கம் என்ற நிலைகளெல்லாம் கிடையாது.
வருஷாபிஷேகம் என்றால் என்ன?
ஏ.பட்சிராஜன், சென்னை.
கும்பாபிஷேகம் செய்யப்பட்ட மாதம், நாள் அக்கோயிலின் ஜன்ம நட்சத்திர நாள் போன்றது. அன்றைய தினம் செய்யப்படும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு வருஷாபிஷேகம் என்று பெயர்.
