ADDED : பிப் 09, 2018 11:32 AM

* ஒரே நாளில் பல கோயில்களை தரிசிப்பவர்கள், மூலவரை மட்டும் தரிசிக்க முழு பலன் கிடைக்குமா?
எஸ்.வனிதா, ஆதம்பாக்கம்
ஏனோ தானோ என கோயில் தரிசனத்தை அவசரமாக செய்யக்கூடாது. மூலவர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களையும் நிதானமாக வணங்குவதுடன், நம் சிற்பக்கலைஞர்களின் கலை அற்புதங்களையும் கண்டு மகிழ்வதும், அதை பிறருக்கு எடுத்து சொல்வதும் நம் கடமை.
சுவாமிக்கு பிரசாதம் படைப்பதன் நோக்கம் என்ன?
தங்க.குஞ்சிதபாதம், சிதம்பரம்
நீராடுவது, உண்பது, உடுத்துவது போல, கடவுளுக்கும் அபிஷேகம், நைவேத்யம், வஸ்திரம் அணிவது என பூஜை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அபிஷேகம், நைவேத்யத்தின் போது தாயாக நாம் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் பிரசாதம் படைக்கப்படுகிறது.
* செயல்கள் நிறைவேற இரண்டு தெய்வங்களுக்கு நேர்ந்து கொள்ளலாமா?
மு.கோவிந்தன், ஸ்ரீவில்லிபுத்துார்
எத்தனை தெய்வங்களை வேண்டினாலும் தவறில்லை. ஆனால் வெற்றிக்கு தேவை மனதில் உறுதி, செயலில் விடாமுயற்சி. தெய்வ அருள் இருந்தால், இவை கிடைக்கும்.
திதி தெரியாதவர்கள் இறந்த நாளில் தர்ப்பணம் கொடுத்தால் பலனுண்டா?
சி.எஸ்.தமிழ்ச்செல்வன், கோவை
உண்டு. இருந்தாலும், இறந்த நாள் தெரிந்தால் பஞ்சாங்கம் மூலம் இறந்த திதியைக் கண்டுபிடிக்கலாம். இந்நாளில் தர்ப்பணம் செய்ய, கூடுதல் பலன் கிடைக்கும்.
பூக்கள் இல்லாத பட்சத்தில், இலைகளால் சுவாமியை பூஜிக்கலாமா?
பீ.சேகர், துடியலூர்
பூக்கள் இல்லாத பட்சத்தில் பூஜிக்கலாம். திருமூலரின் திருமந்திரம் இறைவனை எளிமையாக வழிபட, 'யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை' என்றே கூறுகிறது.
ஐந்து முக விளக்கில் தினமும் ஒரு முகம் மட்டும் ஏற்றுவது சரியா?
கே.லலிதா, மதுரை
பூஜை செய்யும் போது ஐந்து முகமும், மற்ற நேரங்களில் ஒரு முகமும் ஏற்றலாம்.
