
சுபநிகழ்ச்சியின் போது மாவிலை கட்டுவது ஏன்?
ஜே.ஆர்.துர்காதேவி சென்னை
மாவிலை மட்டுமல்ல, தென்னோலை, வாழைமரம் ஆகியவை சுபநிகழ்ச்சிக்குரிய மங்களப்பொருட்கள். ஆகவே திருமணம் நடக்கும் இடங்களை இவற்றால் அலங்கரிக்கிறோம்.
* பழிக்குப்பழி வாங்கும் உணர்வு மேலோங்குகிறது. விடுபட வழியுண்டா?
கே.முத்துலட்சுமி, திருவாடானை
பழிவாங்குவது என்பது தவறான சிந்தனை. நம் மீது ஒருவர் கோபப்படுகிறார் என்றால், அவருக்குக் கோபத்தைத் துாண்டும் அளவுக்கு நம்மிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். பிரச்னை தீரும். பழிவாங்கும் உணர்வு உண்டாகாது. உங்கள் மீது தவறு இல்லாத நிலையில் ஒருவர் தீங்கிழைத்தால், கடவுளிடம் சரணடையுங்கள். அதற்கான தீர்வும், மனநிம்மதியும் கிடைக்கும்.
விரத நாளில் கோயிலில் தரும் பிரசாதத்தை என்ன செய்வது?
கே.வி.சுந்தரராஜன் பெங்களூரு
பசியைப் பொருட்படுத்தாமல், கடவுள் சிந்தனையுடன் விரதம் இருப்பதால், பிரசாதம் உண்பது கூடாது. அதை மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.
* 80வயதில் நடத்தும் கல்யாணத்தை சதாபிஷேகம் எனக் குறிப்பிடுவது ஏன்?
பி.கே.செல்வராஜ், நெய்வேலி
சதம் என்பதற்கு நுாறு என்பது பொருள். ஒருவர் எண்பது வயதைக் கடந்தாலும், கொள்ளுப்பேரன் (பேரனின் பிள்ளை) பிறந்தாலும் அவர்களை நுாறு வயதைக் கடந்தவர்களாக கருதி இத்திருமணத்தை நடத்துவர்.
ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்பது ஏன்?
கே.எல்.புனிதவதி, கோவை
கோத்திரம் என்பது குறிப்பிட்ட ரிஷியின் மரபில் வரும் பரம்பரையினரைக் குறிப்பது. எனவே அம்மரபில் வருபவர்கள் கோத்திரப் பங்காளியாகி விடுவர். அதாவது சகோதர, சகோதரி முறை கொண்டவர்கள் என்பதால் திருமணம் செய்ய கூடாது.

