
* விரதமிருக்கும் போது சுபநிகழ்ச்சியில் பங்கேற்று உண்ணலாமா?
சி.கார்த்திகேயன், சாத்துார்
விரத காலத்தில் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதில் தவறில்லை. வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவு மட்டும் உண்ணலாம். மனதாலும், உடலாலும் துாய்மை காப்பதே விரத நோக்கம்.
*அமாவாசையன்று உணவில் வாழைக்காய் சேர்ப்பது ஏன்?
எஸ்.சுந்தரி, சென்னை
அமாவாசையன்று காய், கனி, கிழங்கு, கீரை உணவு வகைகள் இடம்பெற வேண்டும். இதில் வாழைக்காய் முக்கியமானது. 'வாழையடி வாழையாக' நம் சந்ததி தழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது சேர்க்கப்படுகிறது.
திருடி வைத்த பிள்ளையாருக்கு சக்தி அதிகமாமே ஏன்?
எஸ்.ஸ்ரீதேவி, சிட்லபாக்கம்
பொய் தகவல் இது. எங்கும், எப்போதும் திருட்டால் நன்மை உண்டாகாது. பிள்ளையாரை திருடினால் அது தெய்வகுற்றமும் கூட.
கிரகப்பிரவேசத்தன்று கோபூஜை செய்யாதவர்கள் மற்றொரு நாளில் நடத்தலாமா?
ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி
நடத்தலாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோபூஜை செய்வதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். புண்ணியமும் சேரும்.
அடைப்புக்காலம் (தனிஷ்டா பஞ்சகம்) என்றால் என்ன?
ஏ.ராஜேந்திரன், கோவை
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்கு 'தனிஷ்டா பஞ்சகம்' என்று பெயர். இந்த நாளில் இறந்தவருக்கு பரிகாரம் அவசியம். இறப்புச் சடங்குகளை செய்யும் புரோகிதர் அதைச் செய்வார்.
குலதெய்வ படத்தை வீட்டில் வழிபடலாமா?
த.நேரு, வெண்கரும்பூர்
தாராளமாக. அடிக்கடி தரிசிக்க முடியாதவர்கள், வெளியூரில் இருப்பவர்கள் வீட்டில் படம் வைத்து வழிபடுவது நல்லது.

