
நோயின்றி நீண்டநாள் வாழ என்ன ஸ்லோகம் சொல்லலாம்?
ஆர்.பிரியா, கோவை
''பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே''
என்னும் திருநாவுக்கரசரின் பாடலை பாடினால் ஆரோக்கியம் மேம்படும். நுாறாண்டு காலம் வாழலாம்.
* நினைத்தது நிறைவேற யாரை வழிபடலாம்?
என்.ஜே.கனகேஷ்வரி, திருப்பூர்
தடைகள் அகல விநாயகர், முயற்சி வெல்ல முருகன், திருமணத் தடை அகல மணக்கோல சிவபார்வதி, குழந்தைப் பேறுக்கு தவழும் கண்ணனை வழிபடுங்கள். படிப்புக்கு சரஸ்வதி, பணத்திற்கு லட்சுமி, எதிரி தொல்லைக்கு சரபர், நரசிம்மர், துர்கையை வழிபடலாம். அந்தந்த தெய்வத்திற்குரிய நாள் அல்லது நட்சத்திரத்தில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.
* நட்சத்திரங்களில் இரண்டுக்கு மட்டும் 'திரு' என அடைமொழி ஏன்?
ப.சேரலாதன், மதுரை
திருவாதிரை சிவனுக்குரியது என்பதாலும் திருவோணம் விஷ்ணுவுக்குரியது என்பதாலும் 'திரு' என்னும் அடைமொழியை சேர்க்கிறோம். இதனடிப்படையில் மார்கழி திருவாதிரையன்று சிவனுக்கும், ஆவணி ஓணத்தன்று விஷ்ணுவுக்கும் விசேஷ வழிபாடு நடக்கும். இந்த நட்சத்திரத்தன்று விரதமிருந்தால் கிரகதோஷம் நீங்கும்.
திருமணத்திற்குப் பின் பிறந்த வீட்டு தெய்வத்தை வழிபடலாமா?
எஸ்.வனிதா, சென்னை
தாராளமாக வழிபடலாம். கணவர் வீட்டு குலதெய்வத்துடன், பெண்கள் பிறந்தவீட்டு தெய்வத்துக்கு காணிக்கை, குழந்தைகளுக்கு முடியெடுத்தல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழிபாடுகளையும் செய்யலாம்.
நந்தி காதில் சொன்னால் நல்லது நடக்குமா?
எஸ்.சடையப்பன், திண்டுக்கல்
சுவாமியை தரிசித்து வேண்டுதல்களை மனமுருகிச் சொல்வதே சரி. நந்தியைத் தொடுவது, அதன் காதில் சொல்வது எல்லாம் மூடநம்பிக்கையால் விளைந்த தவறுகள். இதை தவிர்ப்பது நல்லது.
சத் சித் ஆனந்தம் என்பதன் பொருள் என்ன?
பி.கே. செல்வராஜ், நெய்வேலி
'சத்' என்றால் நிலையா னது; 'சித்' என்றால் அறிவு; 'ஆனந்தம்' என்றால் மகிழ்ச்சி. நிலையானவர் கடவுள் ஒருவரே. அவரை வழிபட்டால் நல்லறிவு பெற்று, மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பதை உணர்த்துவதே 'சச்சிதானந்தம்'.
வீட்டில் அடிக்கடி ஹோமம் நடத்தலாமா?
வி.சுவாமிநாதன், ஆதம்பாக்கம்
பெரும்பாலும் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தலாம்.

