ADDED : ஜூலை 26, 2019 02:39 PM

காசிக்கு செல்லும் முன் ராமேஸ்வரம் போகணுமா?
வி.ஆகாஷ், புதுச்சேரி
ஆம். முதலில் ராமேஸ்வரத்தில் நீராடி ராமநாதசுவாமியை தரிசித்து கடல்நீரும், மணலும் எடுத்து காசிக்கு செல்ல வேண்டும். அங்கு மணலைக் கங்கையில் சேர்த்து விட்டு, கடல்நீரால் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கா தீர்த்தம் எடுத்து வந்து ராமேஸ்வரம் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் யாத்திரை முழுமை பெறும்.
* இடப் பற்றாக்குறையால் சுவாமி படங்கள், வீட்டு பரணில் உள்ளன. இப்படி வைக்கலாமா?
ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை
கூடாது. இடத்திற்கு தகுந்தாற்போல் சுவாமி படங்களைக் குறைவாக வைத்து வழிபடுவது நல்லது. அதிகமாக உள்ள படங்களை தேவைப்படுவோருக்கு கொடுங்கள்.
* பெற்றோருக்குப் பாதபூஜை செய்வது ஏன்?
என்.ஜே.ரவி விக்னேஷ், திருப்பூர்
நாம் பிறப்பதற்கு காரணமான பெற்றோரே கண்கண்ட தெய்வங்கள். அவர்களுக்கு நன்றி செலுத்துவது நமது கடமை. அதற்காக பாத பூஜை செய்கிறோம்.
ஓம் என்னும் மந்திரத்தின் பொருள் என்ன?
எம். சாய் ப்ரியா, சென்னை
இதற்கு 'பிரணவ மந்திரம்' என பெயர். 'ஓம்' என்பதுடன் சேர்த்து சொன்னால் பலன் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்தியின் அருளையும் தன்னுள் அடக்கியது இம்மந்திரம்.
இப்பிறவியில் இருக்கும் உறவுகளே அடுத்த பிறவியிலும் தொடருமா?
சி.ஷிவானி,கோவை
பிறவி என்பது அவரவர் செய்த பாவ, புண்ணியத்தால் கிடைப்பது. இதனால் உறவுகள் தொடர வாய்ப்பில்லை. ஆனால் அடுத்த பிறவியிலும் உறவுகள் தொடர சிலர் வேண்டுவதுண்டு. நடராஜரின் திருவடிகளைக் காணும் பாக்கியம் கிடைத்தால் மீண்டும் பிறக்க திருநாவுக்கரசரும், சிவனின் திருவடியை போற்றும் பாக்கியம் கிடைத்தால், மறுபிறவி தரும்படி காரைக்கால் அம்மையாரும் வேண்டியது இங்கு சிந்திக்கத்தக்கது.
கிரகணத்தின் போது சொல்லும் மந்திரத்திற்கு பலன் அதிகமாமே!
மகேஸ்வரி, பொள்ளாச்சி
கிரகணம் என்பது வானில் இயற்கையாக நிகழும் புண்ணிய காலம். இதில் செய்யப்படும் புனித தீர்த்த நீராடல், ஜபம், தர்ப்பணம், ஹோமம், பூஜைகள் எல்லாமே பன்மடங்கு நற்பலன் தரும்.
தோல் நோய் தீர, என்ன பரிகாரம் செய்யலாம்?
கே.ரேஷ்மா, திருவள்ளூர்
நாகபட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லுங்கள். குளத்தில் நீராடி உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி தையல் நாயகி, வைத்தியநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்ய நோய் குணமாகும்.