
வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
** சுமங்கலிப் பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிகிறார்களே! சரியா? பிரேமலதா மகாதேவன், பெரியகுளம்
''மாங்கல்ய தந்துனா'' என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. 'தந்து' என்றால் 'மஞ்சள் கயிறு' என்று பொருள். 'திருமாங்கல்ய சரடு' என்றும் இதனைச் சொல்வார்கள். கணவன் இல்லாதவரை 'விதந்து'என்று குறிப்பிடுவார்கள். அதாவது 'மாங்கல்ய கயிறு இல்லாதவள்' என்று பொருள். மந்திர உச்சரிப்போடு கட்டப்படுகிற மஞ்சள்கயிறைத் தான் பெண்கள் அணிய வேண்டும். விருப்பமுள்ளவர்கள் திருமாங்கல்யத்தைக் கயிற்றிலும், மற்றவற்றை சங்கிலியிலும் அணிவதும் வழக்கம். எப்படியோ மஞ்சள் கயிறு அணிந்து தான் ஆக வேண்டும்.
* கடைகளில் விற்கும் பலகாரங்களை சுவாமிக்கு நைவேத்யம் செய்யலாமா? வி.எஸ்.மோகன், மதுரை
சுவாமிக்கு நைவேத்யம் என்பது தயாரிக்கப்படுவதிலிருந்து பூஜை செய்யப்படும் வரை மற்றவர்கள் பார்ப்பது கூட தவறு என்கிறது சாஸ்திரம். அதாவது தயாரிப்பவரையும் பூஜை செய்பவரையும் தவிர, வீட்டிற்கும் சரி, கோயிலுக்கும் சரி, ஒரே சட்டம் தான். கோயிலில் நைவேத்யம் செய்யும்போது திரை போட்டுவிட்டுச் செய்வதைக் காணலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சுவாமிக்கு நிவேதனம் செய்யும் முன் வேறு யாரும் அதை சாப்பிடக்கூடாது. நைவேத்யத்தின் வாசனையை மற்றவர்கள் முகர்ந்து விடுவதால் ஏற்படும் தோஷத்திற்குக் கூட பரிகாரம் செய்யச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு சட்டங்களும் கோயில் மடப்பள்ளிக்கு என்று இருக்கும் போது கடைகளில் வாங்கி நைவேத்யம் செய்வது எப்படிப் பொருந்தும்?
*பின்னப்பட்ட (உடைந்த) விக்ரகங்களை பூஜிக்கலாமா? எஸ்.ராமு, கோயம்புத்தூர்
தெய்வ விக்ரஹங்களின் அமைப்பை அங்கம் (உடல்), உபாங்கம் (உறுப்புகள்), பிரத்யங்கம் (அணிகலன்) என்று மூன்று விதமாக பிரிப்பார்கள். விக்ரஹங்களில் பின்னம் ஏற்படுவது காலத்தாலும் நிகழலாம். தவறுதலாகவும் நிகழலாம். உடலில் பெரிய அளவில் பிளவு ஏற்படுமே யானால் அதனை மாற்றி வேறு விக்ரஹம் பிரதிஷ்டை செய்ய வேண்டும். உடல் உறுப்புகளில் சரிசெய்யக்கூடிய அளவிற்கு பின்னப்பட்டால் அஷ்டபந்த மருந்தினால் ஒட்டவைப்பது போன்ற பணிகளை செய்து சரி செய்து கொள்ளலாம். கை, கால், தலை ஆகிய உறுப்புகள் உடைந்திருந்தால் அந்த விக்ரஹத்தை மாற்ற வேண்டும். அணிகலன்கள், அலங்காரங்கள் ஆகியவற்றில் பின்னம் ஏற்பட்டிருந்தால் சரிசெய்து பூஜிக்க வேண்டுமே தவிர, விக்ரஹத்தை மாற்றக்கூடாது.
*காயசித்தி என்றால் என்ன? ஜி.ராஜேஸ்வரி, திண்டிவனம்
'காயம்' என்பது உடலையும், 'சித்தி' என்பது வெற்றியையும் குறிக்கும். காயம் எனும் உடலைப் பேணி உயிரைப் பாதுகாத்து அறிவை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதையே 'காயசித்தி' என்பர்.'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று கூறும் திருமந்திர ஆசிரியர் திருமூலர், இம்மண்ணில் காயசித்தி மூலமே மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.
* வயதான காலத்தில் பெற்றோரைத் தவிக்க விட்டு, இறந்தபின் தகனம், தர்ப்பணம் போன்ற சம்பிரதாயங்களை மட்டும் செய்வதைப் பற்றி தர்மசாஸ்திரம் என்ன கூறுகிறது? வே.ப.பாலசுப்பிரமணியன், ஆவடி, சென்னை
பெற்றோரைப் பாதுகாப்பது. இறந்த பின் காரியங்கள் செய்வது இரண்டுமே ஒரு மனிதனுடைய கட்டாயக் கடமைகள். முன்னதை விட்டுவிட்டு பின்னதை மட்டும் செய்வது சரியா என்று கேட்கிறீர்கள். இரண்டும் தனித்தனி கடமையாகும். பெற்றோரை சரியாகப் பாதுகாக்காதது மிகப்பெரிய பாவம் தான். இதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும். இது அவரை மட்டும் பாதிக்கும் விஷயம். இறந்த பிறகு காரியங்கள் செய்யாவிட்டால் கொடிய பாவம். இது சந்ததிகளையே பாதிக்கும். எனவே அவருக்காக இல்லாவிட்டாலும் சந்ததிகளைக் காப்பாற்றுவதற்காகவாவது பித்ரு காரியங்களைச் செய்தேயாக வேண்டும்.