ADDED : அக் 23, 2019 02:37 PM

* தவறு செய்தவரை தெய்வம் எப்போது தண்டிக்கும்?
எல்.சம்யுக்தா, சென்னை
தவறுக்கு கடவுளின் தண்டனை உடனுக்குடன் கிடைக்கிறது. தண்டிக்கப்பட்டாலும் அதையும் மறைத்தும் சிலர் தவறில் ஈடுபடுகின்றனர். அவர்களைப் பொருட்படுத்தாமல் ஒதுங்குவதே நல்லது.
* வழிபாட்டில் சாம்பிராணி அவசியமா?
கே.ஜித்தஷே், புதுச்சேரி
சாம்பிராணி புகை தெய்வ சக்தியை வரவழைக்கும். திருஷ்டி, செய்வினை தோஷத்தை போக்கும்.
கையெழுத்துக்கும் தலையெழுத்துக்கும் தொடர்பு உண்டா?
க. சிவன்யா, மதுரை
தலையெழுத்து நன்றாக இருப்பவர்கள் யோசிக்காமல் கையெழுத்திட மாட்டார்கள். சரியில்லை என்றால் தான் தேவையற்ற நேரத்தில் கையெழுத்திட்டு வருமானவரித்துறை அமலாக்கத்துறை என பலருக்கும் பயந்து வாழ நேரிடும்.
சில தலங்களில் சிவன், சில தலங்களில் அம்மன் பிரசித்தமாக இருப்பது ஏன்?
எஸ்.சர்வஷே், கடலுார்
தல வரலாற்றின் அடிப்படையில் கோயில்கள் பிரசித்தமாக உள்ளன. எந்த கோயிலாக இருந்தாலும் சுவாமி, அம்மன் இருவருக்குமே சக்தி அதிகம்.
* கோயில் சுவரில் நாலா பக்கமும் நந்தி இருப்பது ஏன்?
எல்.ஜனனி, மதுரை
சிற்ப சாஸ்திரப்படி, சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடன், அம்மனுக்கு சிங்கம் இருக்க வேண்டும். எந்த தெய்வத்தின் கோயில் என்பதை உணர்த்தும் மங்களச் சின்னம் இது.
* தர்மம் தலை காக்கும் என்பது இப்போதும் பொருந்துமா?
பி.சஞ்ஜனா, கோவை
இது எப்போதும் பொருந்தும். தர்மம் மட்டுமின்றி சத்தியம், நேர்மை, அடக்கம், ஒழுக்கம் என எல்லா நற்பண்புகளுக்கும் இது பொருந்தும். பெயர், புகழ் என விரும்பாமல் மனதார தர்மம் செய்து பாருங்கள். அப்போது புரியும்.
எந்த திசை நோக்கி மருந்தை உண்ண வேண்டும்?
ஜே.ஷைனிகாஸ்ரீ, கோவை
மருத்துவர் கூறும் அறிவுரைப்படி நேரத்திற்கு சத்தான உணவு, மருந்து சாப்பிட்டால் நோய் தீரும். மேலும் இப்படி யோசிக்காமல் இருந்தாலே உடல்நிலை சீர்படும்.