ADDED : அக் 18, 2019 02:45 PM

* மாலை நேரத்தில் துாங்கக் கூடாதா?
எஸ்.சம்யுக்தா, கடலுார்
சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் துாங்க கூடாது. 'மகாவிஷ்ணுவாக இருந்தால் கூட அவரை விட்டு நீங்குவேன்' என்கிறாள் மகாலட்சுமி. மாலையில் துாங்கினால் செல்வம் குறையும்.
ஊமத்தம்பூ சிவனுக்கு உகந்ததா?
பி.விகாஷ், பெங்களூரு
'பொன் பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்' என சிவனை கோளறு பதிகம் போற்றுகிறது. இதில் 'மத்த மாலை' என்பது ஊமத்தம் பூவைக் குறிக்கும். எனவே பூஜிக்கலாம்.
அடைப்புக் காலம் என்றால் என்ன
கே.ஜெயராமன், திண்டுக்கல்
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரம் அன்று ஒருவர் இறந்தால் 'தனிஷ்டா பஞ்சமி தோஷம்' ஏற்படும். இதற்காக மூன்று மாதம் வரை வீட்டை அடைத்து வைப்பர். இதன் மூலம் இறந்தவருக்கு நற்கதியும், குடும்பத்தினருக்கு நல்வாழ்வும் கிடைக்கும்.
காசியை தரிசித்தவர்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன?
ஆ.செந்தில், திருவள்ளூர்
காசி, கைலாஷ் புனிதமான பயணம் சென்றவர்கள் தம்மிடம் உள்ள குறைகள், குற்றங்களைப் போக்க வேண்டும். யாருக்கும் கேடு நினைக்காமல், நல்லதை மட்டும் சிந்திக்க வேண்டும்.
*பூஜையறையில் வேல் வைத்து வழிபடலாமா?
சி. அர்னேஷ், சென்னை
பராசக்தியின் அம்சம் முருகனின் வேல் என்பதால் அதனை 'சக்திவேல்' என்பர். 'வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை' என்பர். வேலை பூஜிப்பவரை முன் செய்த தீவினைகள் நெருங்காது. தாராளமாக வழிபடலாம்.
*அம்மன் கோயிலில் மாவிளக்கு ஏற்றுவது ஏன்?
கே. ரனிஷாஸ்ரீ, கோவை
மாவால் செய்த அகல் நம் உடலாகவும், அதிலுள்ள தீபச்சுடர் நம் உயிராகவும் கருதுவர். பக்தன் தன்னை முழுமையாக கடவுளின் திருவடியில் அர்ப்பணிப்பது மாவிளக்கின் நோக்கம். நோய் தீரவும், திருமணத்தடை அகலவும் குலதெய்வம், அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவர்.
*சிலர் கோயிலில் எடைக்கு எடை காசு கொடுப்பது ஏன்?
எல். ஜித்தேஷ், மதுரை
இதனை துலாபார காணிக்கை என்பர். துலா என்றால் தராசு. திருமணம், குழந்தைப்பேறு, உடல்நலம் வேண்டி இதனை நேர்ந்து கொள்வர். நாணயம், வெல்லம், பழம், தானியம் என காணிக்கை செலுத்துவர். விருப்பம் நிறைவேறியதும் துலாபாரம் செலுத்துவது அவசியம்.