ADDED : அக் 31, 2019 11:57 AM

* மணமான பெண்கள் மெட்டி அணிவது கட்டாயமா?
எஸ்.பார்கவி, பெங்களூரு
திருமணம் என்பது புனிதமான சடங்கு. அப்போது திருமாங்கல்யம், மெட்டி போன்ற மங்களச் சின்னங்களை அணிவது அவசியம். இது ஏன், எதற்கு என விவாதிப்பதை விட பெரியோர்களின் வழிகாட்டுதலை ஏற்பதே நல்லது.
* கோயிலுக்கு எதிரில் குடியிருக்க கூடாதாமே ஏன்?
ஆர்.கவின், கடலுார்
பெரிய கோயில்களில் நான்கு திசைகளிலும் கோபுரம் இருக்கும். ஆகம விதிப்படி வாசல்களின் எதிர்புறம் சன்னதி தெரு இருக்க, அதன் இருபுறமும் வீடுகள் இருக்கும். சன்னதியின் எதிர்புறத்தில் வீடு இருந்தால், தெய்வத்தின் நேர் பார்வைபடும். சுவாமியின் கடைக்கண் பார்வை படும் இடங்களில் அதாவது, சன்னதியின் இடது, வலது புறங்களில் குடியிருப்பது நன்மை தரும்.
குழந்தை வரம் பெற யாரை வழிபடலாம்?
வி.அவந்திகா, ஊட்டி
* பெருமாள் கோயிலில் சந்தான கோபால சுவாமியை வழிபடலாம்.
* வளர்பிறை சஷ்டி, கந்தசஷ்டி விரதமிருந்து முருகனையும், பிரதோஷ விரதமிருந்து சிவனையும் வழிபடலாம்.
* தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயிலில் நெய் பிரசாதம் பெற்று தினமும் சாப்பிடலாம்.
இவற்றில் ஒன்றை கடைபிடித்தால் போதும்.
* பூஜைக்குரிய துளசியை எங்கு வைக்க வேண்டும்?
டி.சைலஜா, சாத்துார்
முன்காலத்தில், வீட்டின் நடுமுற்றத்தில் துளசி செடியை வைப்பர். தற்போது வீட்டின் வடகிழக்கு மூலை அல்லது கிழக்குத் திசையில் வைக்கலாம். அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்கள் கிழக்கு, மேற்கு, வடகிழக்கு திசைகளில் வைக்கலாம்.
* கர்ப்பிணி இருக்கும் வீட்டில் மராமத்து செய்யக் கூடாதா?
பி.ஆருத்ரன், சென்னை
மராமத்து பணி செய்தால் ஈ, எறும்பு உள்ளிட்ட உயிர்கள் பாதிக்கப்படும். அந்த பாவம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கும். மராமத்து வேலையால் ஏற்படும் சப்தம், அதிர்வும் கருச்சிதைவை ஏற்படுத்தும். இதனால் மராமத்தை தவிர்ப்பது நல்லது.