
வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
* பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகுந்த வீட்டில் அதிக துன்பம் அனுபவிப்பார்கள் என்பது உண்மையா? ஜி.ரோகிணி, சென்னை
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நடப்பு கிரக சஞ்சாரங்களினால் ஏதாவது கஷ்டங்கள் நேரிட்டிருக்கலாம். கிரக சஞ்சாரங்கள் நன்றாக இருந்தால் எல்லோரையும் போலவே அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.
*கோயில்களில் பரிகாரம் செய்துவிட்டு வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடுவது சரியா? ஆர்.பரமகுரு, சிதம்பரம்
சுவாமி பிரசாதத்திற்கு எந்த தோஷமும் கிடையாது. பரிகார பூஜை நைவேத்ய பிரசாதங்களைபக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் விநியோகம் செய்து விட்டு நீங்களும் சாப்பிடலாம்.
** கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகர் அகவல், சஷ்டி கவசம் படிப்பது போதுமானதா? எம்.காவேரி, பரமக்குடி
கோயிலுக்குச் செல்ல முடியாதபடி அப்படி என்ன வேலையோ? அநேகமாக ஒவ்வொரு வாரமும் இந்தக் கேள்வியை யாராவது கேட்கிறார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் இது போன்று சிந்திக்கவே கூடாது. திருக்கோடிக்காவல் தேவாரத்தில் திருநாவுக்கரசர் ''கோயிலுக்குச் செல்வதற்கு நாள் நட்சத்திரம் பார்க்காதே'' என்கிறார். நாம் தினமும் கோயிலுக்குச் சென்றால் நாமும் வளருவோம். நமது சமயமும் வளரும்.
* சனிபிரதோஷத்தின் பெருமையை எடுத்துக் கூறுங்கள்? ஆர்.கதிரேசன், விருதுநகர்
பிரதோஷம் என்பது ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1) நித்ய பிரதோஷம், (2) பட்சப் பிரதோஷம், (3) மாச பிரதோஷம், (4) மஹா பிரதோஷம், (5) ப்ரளய பிரதோஷம். 'பிரதோஷம்' என்றால் அனைத்துக் குற்றங்களும் பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலமாகும். ஜாதகத்தில் ஏதாவது குற்றங்கள் இருந்தால் திருமணத்தடை, புத்திரப்பேறின்மை, கடன் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதகக் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடங்கள், பின்பு 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும். இது நித்ய ப்ரதோஷம். வளர்பிறை திரயோதசி திதி மாலைப் பொழுது பட்ச பிரதோஷமாகும். தேய்பிறைத் திரயோதசி திதியின் மாலைப்பொழுது மாச பிரதோஷமாகும். சனிக்கிழமையன்று தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது தான் மஹா பிரதோஷம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை சனி மஹாபிரதோஷம் என்றும் கூறுவர். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள் இது. மற்றைய பிரதோஷங்களில் உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க இயலாதவர்கள் சனி பிரதோஷத்தன்றாவது உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல ÷க்ஷமங்களும் உண்டாகும். ஐந்தாவதாகிய பிரளய பிரதோஷம் என்பது இந்தக் கலியுகம் முடிந்து அனைத்து உலகங்களையும் சிவபெருமான் தம்மகத்தே ஒடுக்கிக் கொள்வதாகும்.
* கார்த்திகை மாதத்தில் மாலை நேரத்தில் வாசலில் விளக்கு வைப்பதன் காரணம் என்ன? பிரதோஷ தினத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்யலாமா? கோ.ரேவதி, விழுப்புரம்
கார்த்திகை மாதம் விளக்கேற்றுவது மிகப்புண்ணியமான செயலாகும். ஆண்டாண்டு காலமாக தமிழர்களின் கலாச்சாரமாகவும் இந்நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஐப்பசி, கார்த்திகை மழைக்கால மாதங்களில் எல்லா ஜீவராசிகளும் சில கஷ்டங்களுக்கு உள்ளாகின்றன. இவற்றைப் போக்கும் சக்தி எண்ணெய் தீபத்திற்கு இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனையே திருஞானசம்பந்தர் மயிலாப்பூர் தேவாரத்தில் 'கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ' என்று பாடியுள்ளார். பிரதோஷ தினத்தில் மற்றைய ஜோதிட விஷயங்கள் ஒத்து வந்தால் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்.