
* 48 நாள் விரதமிருந்தால் நினைத்தது நிறைவேறுமா?
பி.சரண்யா, சென்னை
நிறைவேறும். ஆனால் இரு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நினைக்கும் விஷயம் நம் சக்திக்கும், தகுதிக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். கஷ்டப்பட்டு விரதம் இருக்கிறோமே... நடக்குமா நடக்காதா என சந்தேகம் கொள்வது கூடாது.
* ஜாதக ரீதியாக நேரம் சரி இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?
எம்.வருண், விழுப்புரம்
நோய் தீர்க்க மருந்து இருப்பது போல ஜாதக ரீதியான தோஷத்திற்கும் பரிகாரம் உண்டு. எந்த கிரகத்தால் தோஷம் ஏற்பட்டதோ, அதற்குரிய பரிகாரத்தை செய்ய வேண்டும். உதாரணமாக திருமணத் தடை நீங்க வியாழனன்று தட்சிணா மூர்த்தியை வழிபடலாம். செவ்வாய் தோஷத்திற்கு முருகனுக்கு செவ்வாயன்று பாலாபிஷேகம் செய்யலாம்.
* தீமை செய்து விட்டு கடவுளை வழிபட்டால் பலன் கிடைக்குமா?
எல்.ஷிவானி, தேனி
தீமைக்கான தண்டனை தான் கிடைக்கும். அறிந்தே தீமை செய்தவர்கள் கடவுளை சரணடைவதோடு, தங்களைத் திருத்திக் கொண்டு தீமையில் இருந்து முதலில் விலக வேண்டும்.
* வேலையின்மைக்கு பரிகாரம் சொல்லுங்கள்?
கே.மதுவந்தி, ஊட்டி
வேலையில்லை என்று சொல்வதே தவறு. வேலைகள், சுயதொழில்கள் என வாய்ப்புகள் நிறைய காத்திருக்கின்றன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுவதற்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை தான் சிறந்த பரிகாரங்கள். இவற்றைக் கடைபிடித்தால் கடவுள் அருளும் துணை நிற்கும்.
விநாயகருக்கு கல்யாணம் நடந்ததா இல்லையா?
சி.கணஷே், திருப்பூர்
பிரம்மச்சாரி, குடும்பஸ்தர் என இரு நிலைகளிலும் விநாயகர் வழிபாடு நடக்கிறது.
புராணத்தின் அடிப்படையில் அருள், அறிவு என்னும் பண்புகளையும் புத்தி, சித்தி என்னும் சக்திகளாக (மனைவியராக) ஏற்று 'சித்தி புத்தி கணபதி' எனப்படுகிறார். விநாயகர் மூலவராக உள்ள திருத்தலங்களில் ஆவணியில் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கும். மணம் புரியாமல் பிரம்மச்சாரி கோலத்தில் ஆற்றங்கரை, அரசமரத்தடியில் கோயில் கொண்டிருக்கிறார்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆன்மிகம் வழிகாட்டுகிறதா?
பி.வைஷ்ணவி, கடலுார்
நம் முன்னோர் சொல்லியபடி சுயஒழுக்கம், கட்டுப்பாடு, பண்பாடு நிறைந்ததாக வாழ்க்கையை மாற்றினால் போதும். ஆன்மிகம், சத்தான உணவு, உடற்பயிற்சி என ஹிந்துமதம் கூறிய விஷயங்களையே தற்போது உலக நாடுகள் எல்லாம் நோய் எதிர்ப்பு சக்திக்கான வழிமுறையாக பின்பற்றத் தொடங்கியுள்ளன.