
* கைரேகை பார்த்து ஜோதிடம் சொல்ல முடியுமா
எல்.ரிஷிவந்த், மதுரை
ரேகை என்றால் கோடு. உள்ளங்கையில் இயற்கையாக அமைந்த கோடுகள் நம் எதிர்காலத்தை அறிய உதவுகின்றன. ஆண்களுக்கு வலது கையும், பெண்களுக்கு இடது கையும் பார்த்து பலன் சொல்வர்.
* பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அப்படியே நடக்குமா?
வி.விஷால், சென்னை
எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நன்மை, தீமைகளை அறிய உதவுவது பஞ்சாங்க கணிதம். பவுர்ணமி எனக் குறிப்பிட்டிருக்கும் நாளில் வானில் முழுநிலா தெரிகிறது. அமாவாசையன்று வானம் கும்மிருட்டாக இருக்கிறது. கிரகணம் எனக் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் வானில் அபூர்வ நிகழ்வு அப்படியே நிகழ்கிறது. இன்னும் பஞ்சாங்கத்தின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒருவர் இறந்தால் அவரது பங்காளிகளுக்கும் தீட்டு உண்டா?
எல்.ஆகாஷ், விழுப்புரம்
பங்காளித் துக்கம் என்பது ஒரு ஆண்டு நீடிக்கும். தலை திவசம் கொடுக்கும் வரை புண்ணிய நதிகளில் நீராடுதல், மலைக்கோயில்களை தரிசித்தல், திருத்தலயாத்திரை செல்லுதல் கூடாது.
கால பைரவர் வழிபாட்டின் நோக்கம் என்ன?
கே.ருத்ரா, திருப்பூர்
கிரகங்களால் ஏற்படும் கிரக தோஷம், பணக் கஷ்டம், திருஷ்டி, எதிரிகள் தொல்லை ஆகியவற்றைப் போக்கி நம்மைக் காத்தருளுவார் காலபைரவர்.
* லட்சுமி கடாட்சம் பெற என்ன வழி?
சி.ஸ்ரேயா,கோவை
வெள்ளிக்கிழமை காலை 6:00 - 7:00 மணிக்குள் மகாலட்சுமிக்கு விளக்கேற்றி 108 போற்றி அல்லது அஷ்டோத்திரம் சொல்லி தாமரை மலரால் அர்ச்சனை செய்ய வீட்டில் செல்வம் பெருகும். அந்த வீட்டில் திருமகள் தங்குவாள்.
* தலைமுறையினர் மகிழ்ச்சியோடுவாழ என்ன செய்ய வேண்டும்?
பி.அனன்யா,கடலுார்
தர்மவழியில் வாழ்ந்து புண்ணியம் சம்பாதிக்க வேண்டும். கோயில் வழிபாட்டில் தான் ஈடுபடுவதோடு, குடும்பத்தினரும் ஈடுபட வழிகாட்ட வேண்டும். முன்னோருக்கான பிதுர் கடன்களை முறையாகச் செய்ய வேண்டும். இதற்கும் மேலாக மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோருக்கு மனதாலும் தீங்கு நினைக்கக் கூடாது.
புதுவீட்டில் கணபதிஹோமம் செய்வது கட்டாயமா?
ஆர்.தீபன், தேனி
வீடு கட்டப்படும் இடத்தில் நம்மையும் அறியாமல் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். அதைப் போக்குவது அவசியம். வீடு மங்களகரமாக இருக்க வேண்டும். சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நிகழ வேண்டும். இதற்காக தடைகளை தகர்க்கும் விநாயகரை வழிபடும் விதமாக கணபதிஹோமம் நடத்துகிறோம்.