ADDED : மே 14, 2021 05:04 PM

* கோயில் வழிபாட்டிற்கு விரதமிருப்பது கட்டாயமா?
வி.சுதாகர், சோளிங்கநல்லுார்
வழிபாட்டிற்கு மனம், உடல் துாய்மை அவசியம்.அசைவத்தை தவிர்த்தால் போதும். அதற்காக விரதமிருப்பது அவரவர் மனதைப் பொறுத்தது.
* கம்ப்யூட்டர் சாம்பிராணி பயன்படுத்தலாமா?
என்.லலிதா, அவினாசி
கம்ப்யூட்டருக்கும், சாம்பிராணிக்கும் என்ன சம்பந்தம்! ஏன் இந்த பெயர் வந்தது. பழைய சாம்பிராணி கட்டியை பூஜைக்கு பயன்படுத்துங்கள். ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் புகையை விட்டு விலகியிருப்பது நல்லது.
* மகாலட்சுமி படம் எந்த திசை நோக்கி இருக்க வேண்டும்?
வி.சுகன்யா, கல்லிடைக்குறிச்சி
பூஜையறை கிழக்கு நோக்கி இருப்பது வழக்கம். தவிர்க்க இயலாத காரணத்தால் வடக்கு நோக்கி வைக்கலாம்.
* வழிபடும் போதெல்லாம் கடவுளிடம் கோரிக்கை வைக்கலாமா?
வி.கிேஷார், உசிலம்பட்டி
உங்கள் கோரிக்கையில் நியாயம் இருந்தால் நிச்சயம் நிறைவேற்றுவார்.
ஸ்படிக மாலையைப் பெண்கள் அணியலாமா?
கே.ஆர்.வசுமதி, திருப்புல்லாணி
ஸ்படிகம் என்பது நவரத்தினம் போன்றது தான். தாராளமாக அணியலாம்.
உயிர்ப்பலி கொடுக்காமல் குலதெய்வத்தை வழிபடலாமா?
சி.வினிதா, பெங்களூரு
நிச்சயமாக. குலதெய்வம் உட்பட எந்த தெய்வத்திற்கும் உயிர்ப்பலி வேண்டாம். பால், பொங்கல், பானகம், மாவிளக்கு போன்றவைகளை படைக்க வேண்டும்.
சோதனைகளை சாதனைகளாக்க என்ன செய்யலாம்?
பி.ஸ்ரேயா, பொள்ளாச்சி
குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். நெருக்கடியையே சிந்திக்காமல், அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குங்கள். விடாமுயற்சியும், பக்தியும் இருந்தால் சாதிக்கலாம்.
சனி நீராடு என்பதன் பொருள் என்ன?
எம்.ஆதித்யா, கள்ளக்குறிச்சி
'சனி' என்பது 'குளிர்ச்சி' என்றும் பொருள்படும். உடம்பு குளிர்ச்சியாக இருக்க தினமும் நீராட வேண்டும். சனிதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் இப்படி சொல்வர்.
பஞ்சமுக விநாயகர் பற்றி சொல்லுங்கள்.
எஸ்.கோபி, மாதவரம்
விநாயகரின் அருட்கோலங்கள் பதினாறு. இதில் பதினோராவது வடிவம் ேஹரம்ப கணபதி என்னும் பஞ்சமுக விநாயகர். ஐந்து முகம், பத்து கைகள் கொண்டவர் இவர்.
இவரை வழிபட்டால் எதிரி தொல்லை, வீண்பயம் பறந்தோடும்.
