ADDED : ஜூலை 07, 2022 09:43 AM
ஆர்.கவிதா, திருத்தணி.
*பசு தானம் செய்ய வசதி இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?
முழு கொப்பரைத் தேங்காயை தானம் அளித்தால் கோதானம் செய்த பலன் கிடைக்கும்.
ச.மகதி, பெங்களூரு.
*மன உளைச்சலால் துாக்கமின்றி தவிக்கிறேன். என்ன செய்யலாம்?
தினமும் மாலை நடந்தே கோயிலுக்குச் செல்லுங்கள். நிதானமாக வழிபடுங்கள். கடவுள் அருளால் பிரச்னை தீரும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்புங்கள். 'டிவி', அலைபேசியை புறக்கணித்து விட்டு நேரத்துடன் சாப்பிடுங்கள். சிந்தனையைத் துாண்டும் நல்ல புத்தகங்களை படித்து விட்டு துாங்குங்கள். மனஉளைச்சல் மறைவதை உணர்வீர்கள்.
எம்.அனுராதா, கோவை.
*சாப்பிடும் போது பாதியில் எழுந்திருக்கலாமா?
கடவுளுக்குச் சமமானது உணவு. சாப்பிடும் போது பாதியில் எழுவது கூடாது. மீறினால் உணவை அவமதித்த பாவம் ஏற்படும்.
வி.ஜானகி, புதுச்சேரி.
*பிறந்தநாளன்று சுவாமிக்கு என்ன செய்யலாம்?
அபிஷேகம், அலங்காரம், புதுவஸ்திரம் சாத்துதல், அர்ச்சனை, நிவேதனம் என விரும்பியதைக் கடவுளுக்குச் செய்யுங்கள். கடவுளின் அருளைப் பெற அன்னதானம் செய்வது சிறப்பு.
ஆர்.அம்மணி, தேனி.
*கர்ப்பிணிகள் எப்போது கோயிலுக்கு செல்லக் கூடாது?
பிரசவம் நடக்கும் வரை கோயிலுக்கு செல்லலாம். குழந்தை பிறந்த பின்னர் தீட்டு ஏற்படுவதால் கோயிலுக்குச் செல்லக் கூடாது.
கே.பவித்ரா, நாகர்கோவில்.
*சனி திசை நடக்கும் போது திருமணம் நடத்தலாமா?
சனி திசை 19 ஆண்டுகள். அதுவரை காத்திருக்க முடியுமா... திருமணம் நடத்த குருபார்வை தான் அவசியம்.
கே.புவனேஸ்வரன், மதுரை.
*விநாயகர் பூஜைக்காக வீட்டில் எருக்கஞ்செடி வளர்க்கலாமா?
வளர்க்கக் கூடாது. வெளியிடங்களில் பறித்தோ அல்லது விலைக்கு வாங்கியோ எருக்கம்பூவை விநாயகருக்கு சாத்துங்கள்.
எல்.கார்த்திகேயன், புதுடில்லி.
*ஜோதிடர் சிலர் மாலை 6:00 மணிக்கு மேல் ஜாதகம் பார்ப்பதில்லையே ஏன்?
ஜோதிடத்திற்கு அடிப்படை நவக்கிரகம். அவர்களின் நாயகரான சூரியன், ஒளி தரும் பகலில் மட்டுமே ஜாதகம் பார்க்க வேண்டும் என்பது நியதி. இதனால் இரவில் ஜோதிடம் பார்ப்பதில்லை.
வி.அருண், திருநெல்வேலி.
*ஆண்டுக்கு எத்தனை முறை பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்?
12 அமாவாசை, 12 தமிழ் மாதப்பிறப்பு உள்ளிட்ட 96 முறை பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது மிக அவசியம்.
