
எம்.வெங்கட்ராமன், ராஜபாளையம், விருதுநகர்.
*விளக்கு வைத்த பின்னர் கடன் கொடுப்பது தவறா...
தவறில்லை. தொழில் முறையில் கடன் கொடுப்பது இயல்பானதே. அவசரமான நேரத்தில் தனிநபர்களும் இதை பின்பற்றலாம்.
மு.ராமநாதன், ஸ்ரீமுஷ்ணம், கடலுார்.
*வீட்டைச் சுற்றிலும் சாம்பிராணி துாபம் காட்டுவது அவசியமா?
அவசியமே. சாம்பிராணி புகை தெய்வ சக்தியை வரவழைக்கும். தீமையை அகற்றும். கண் திருஷ்டி போக்கும். செய்வினை தோஷம் அகலும். இதை சுவாசிப்போருக்கு நோய் நொடி நீங்கும். வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமையில் சாம்பிராணி துாபமிட்டு வழிபடுவது நல்லது.
ஆ.விநாயகம், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
*சஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன?
திருமணப் பொருத்தங்களில் இதுவும் ஒன்று. பெண்ணின் ராசியில் இருந்து எண்ணினால் பையனின் ராசி ஆறாவதாகவும், பையன் ராசியிலிருந்து எண்ணினால் பெண்ணின் ராசி எட்டாவதாகவும் வரக் கூடாது. சஷ்ட- ஆறு, அஷ்ட- எட்டு. இப்படி வந்தால் சண்டையிட்டுக் கொண்டே இருப்பர். இதில் சில ராசிகள் அனுகூல சஷ்டாஷ்டகமாகவும் இருப்பதுண்டு.
வி.வாசுதேவன், பீடம்பள்ளி, கோயம்புத்துார்.
*தேய்பிறை நாட்களில் நல்ல செயல்களை செய்யலாமா?
தேய்பிறையின் முதல் ஐந்து நாட்கள் அதாவது பஞ்சமி திதி வரை நல்ல செயல்களைச் செய்யலாம். இந்த நாட்களில் சந்திரன் பலமாகவே இருக்கும்.
பி.ராஜன், கோவில்பட்டி, துாத்துக்குடி.
*கோயில்களில் சிவபெருமானை ஆடிப்பாடி துாக்குவது ஏன்?
ஆடல்வல்லான், நடராஜர், சபாநாயகர் என பலவிதமாக போற்றினால் போதுமா... சிவனை ஆடிப்பாடி துாக்குவதை 'திருநடன உற்ஸவம் என்பர். அதிலும் திருவாரூர் தியாகராஜர் பவனியைக் காண கண்கோடி வேண்டும்.
எல்.பரிமளா, தமிழர் என்கிளேவ், டில்லி.
*சிவன் கோயில் சுவரில் நான்கு பக்கமும் நந்தி சிலை இருப்பது ஏன்?
சிற்ப சாஸ்திரப்படி, கோயில் சுவரில் சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடன், அம்மனுக்கு சிங்கம் இருக்க வேண்டும். தொலைவில் இருந்தே எந்த தெய்வத்தின் கோயில் என்பதை உணர்த்தும் மங்களச் சின்னமாக இது விளங்குகிறது.
வி.குமார், ராமமூர்த்தி நகர், பெங்களூரு.
*காலையில் விழித்ததும் உள்ளங்கைகளைப் பார்ப்பது ஏன்?
உள்ளங்கையின் நுனியில் மகாலட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், அடியில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம். விழித்ததும், உள்ளங்கைகளைப் பார்ப்பதால் முப்பெருந்தேவியர் அருள் கிடைக்கும். இதனால் நாள் முழுதும் மகிழ்ச்சி, மனபலம், செல்வ வளம் சேரும்.
மோ.நிர்மலா, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.
*இறந்தவரின் அஸ்தியை வீட்டில் வைத்திருக்கலாமா?
கூடாது. அஸ்தியை வைத்திருந்தால் தோஷம் ஏற்படும். உடனடியாக ஆறு, கடலில் கரைத்து விட்டு குடும்பத்தினர் அனைவரும் தலைக்கு குளியுங்கள். புண்யாக வாசனம் செய்து வீட்டை துாய்மைப்படுத்துவதும் அவசியம்.

