
சி.கோவிந்தன், தென்கரை, கோயம்புத்துார்.
*ஆசிரியருக்கு தீங்கு செய்தேன். தற்போது அவர் காலமாகி விட்டார். பரிகாரம் உண்டா?
ஆசிரியரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்கலாம். அவர்களுக்கு உதவி செய்யலாம். வாய்ப்பு இல்லாவிட்டால் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள் வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யலாம்.
எல்.சங்கர், ஆறுமுகநேரி, திருநெல்வேலி.
*தினமும் சிலர் மந்திரம் சொல்லி சூரியனை வழிபடுகிறார்களே...
சூரிய பகவானுக்குரிய மந்திரத்தைச் சொல்வதால் நல்ல புத்தியும், உடல்நலமும் ஏற்படும்.
வி.நவின், அசோக்விஹார், டில்லி.
*குருவின் பார்வை பலம், ஸ்தான பலம் எது சிறப்பானது?
ஜாதகத்தில் குரு அமர்ந்திருக்கும் இடம் குருவின் ஸ்தானம். அங்கிருந்து 5,7,9 ராசிகளை அவர் பார்ப்பார். இதையே குரு பார்வை என்கிறோம். குரு பார்வையே சிறப்பானது.
எம்.அனந்து, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்.
*காசியில் வாங்கிய சிவலிங்கம் ஒன்று வீட்டில் உள்ளது. என்ன செய்யலாம்?
தினமும் சிவபூஜை செய்பவரிடம் சிவலிங்கத்தை கொடுத்து விடுங்கள்.
ஆர்.நிவேதா, நியூபாகலுார், பெங்களூரு.
*வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்த நெல்லி மரம் காய்க்கவில்லை என்ன செய்யலாம்?
ஆண் மரமாகவோ, சத்துக் குறைவாகவோ அந்த மரம் இருக்கலாம். இன்னொரு நெல்லி மரத்தை அதனருகில் நட்டு பசுவின் சாணத்தை உரமாக இடுங்கள்.
எம்.காவ்யா, மீஞ்சூர், திருவள்ளூர்.
*மூன்று தலைமுறையாக விட்டுப்போன குலதெய்வத்தை கும்பிடலாமா?
கும்பிடலாம். அதற்கான காரணத்தை அறிந்து பரிகாரம் தேடுங்கள்.
பி.செந்தில், ஆத்துார், திண்டுக்கல்.
*மரியாதைக்கும், மதிப்புக்கும் என்ன வேறுபாடு?
மரியாதை என்பது பதவிக்காகவும், இடத்தைப் பொறுத்தும் மாறக் கூடியது. ஒருவர் இல்லாத போதும் மாறாதது மதிப்பு.
கே.கவிதா, பழவந்தாங்கல், சென்னை.
*விஞ்ஞானம், மெய்ஞானம் வேறுபாடு என்ன
ஆராய்ச்சி மூலம் உண்மையை அறிவது விஞ்ஞானம். தவத்தின் மூலம் உண்மையை உணர்வது மெய்ஞானம்.
டி.பவித்ரா, திருமங்கலம், மதுரை.
*ஓம் என்னும் மந்திரம் பற்றி சொல்லுங்கள்.
ஓம் என்னும் சப்த வடிவமாகத் தான் உலகில் ஒலி தோன்றியது. இதை பிரணவ மந்திரம் என்பர். இதைச் சேர்த்தே 'ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய' என மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.
பி.சாய்சரண், குருந்தன்கோடு, கன்னியாகுமரி.
*சண்டேச நாயனாரை வழிபடுவது எப்படி?
சிவனடியார்களின் தலைவரான இவர் எப்போதும் தியானத்தில் இருப்பார். இவரது சன்னதியின் முன் மூன்று முறை மெதுவாக கையைத் தட்டி பிரார்த்திக்க வேண்டும்.

