
கே.வனிதா, வசந்த்குஞ்ச், டில்லி.
*சமய ஒற்றுமைக்கு விநாயகர் வழிவகுக்கிறாரா?
சைவர்கள் கணபதி என்றும், வைணவர்கள் தும்பிக்கையாழ்வார் என்றும் வழிபடுவது சமய ஒற்றுமை தானே... மதம், மொழி, நாடு என்பதை கடந்து வழிபடும் தெய்வம் இவர்.
எம்.பூவண்ணன், அப்பாலத்தி, மைசூரு.
*விநாயகர் பற்றிய புராணங்கள்...
1. கச்சியப்ப முனிவர் எழுதிய விநாயக புராணம். 2. வடமொழியிலுள்ள முத்கல புராணம்
சி.அருணாசலம், காட்டுகரணை, செங்கல்பட்டு.
*ஒற்றைக் கொம்பன் என்பதன் பொருள்...
எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது என வரம் பெற்ற கஜமுகாசுரனையும் தன் தந்தத்தை ஒடித்துக் கொன்றார். இதனால் இவரை 'ஒற்றைக் கொம்பன்' என அழைக்கிறோம். இந்த தந்தத்தை எழுத்தாணியாக்கி வியாசரின் மகாபாரதக்கதையை எழுதினார்.
எல்.மகாதேவன், ஒட்டபிடாரம், துாத்துக்குடி.
*கணநாதர் என அழைப்பது ஏன்?
தடைகளைப் போக்கும் விநாயகரை தேவ கணங்களின் தலைவர் ஆக்கினார் சிவன். இதனால் 'கணநாதர்' என இவரை அழைக்கிறோம்.
ஆர்.கமலா, மேனாம்பேடு, சென்னை.
*விநாயகருக்கு பிடித்த நைவேத்யங்கள்...
கொழுக்கட்டை, எள்ளுருண்டை, பொரி, அவல், கரும்பு, சத்துமாவு, வாழைப்பழம், தேங்காய் ஆகியவை இவருக்கு பிடித்தவை.
வி.சதீஷ், பாலப்பள்ளம், கன்னியாகுமரி.
*விநாயகர் புராணம் படிப்பதால் பலனுண்டா?
தடைகள் விலகி வெற்றி கிடைக்கும். ஐப்பசியில் விரதமிருந்து இலங்கைத் தமிழர்கள் இதை படிக்கிறார்கள்.
ஆர்.கணேஷ், திருமோகூர், மதுரை.
*விநாயகர் வழிபட்ட சிவாலயம் எது?
நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் விநாயகர் சிவபூஜை செய்து வழிபட்டார். கணபதீச்சரம் என்றும் இதற்கு பெயருண்டு.
எம்.ஜெயச்சந்திரன், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல்.
*அருகம்புல் சாத்துவது ஏன்?
கஜமுகாசுரனை அழித்த விநாயகர் உக்கிரத்தில் இருந்தார். அருகம்புல்லால் அர்ச்சித்து நாரதர் அவரை குளிர்வித்தார். அருகம்புல் அர்ச்சனையால் செல்வம் பெருகும்.
பி.கிருத்திகா, தட்டான்சாவடி, புதுச்சேரி.
*விநாயகருக்கு ஆகாத பூக்கள் யாவை?
இவருக்கு ஆகாத பூக்கள் என எதுவுமில்லை. எருக்கு, வன்னி, அருகு போன்றவையாலும் அர்ச்சனை செய்யலாம்.
ஜி.வெங்கடேஷ், தளவாய்பாளையம், பொள்ளாச்சி.
*விநாயகருக்குரிய ஸ்லோகம் ஒன்றை சொல்லுங்கள்.
அகஜாநந பத்மார்க்கம்
கஜானன மஹர்நிசம்!
அநேக தந்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே!!
தினமும் இதை மூன்று முறை சொல்லுங்கள்.